மதுரவாயல் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்: 4 பேர் தீக்குளிக்க முயன்று பரபரப்பு!


மதுரவாயல் அருகே, மார்க சகாயீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து, ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருள்மிகு மார்க் சகாயீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக 22,552 சதுர அடி நிலம் உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை, சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் பணியில் அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நீதிமன்ற உத்தரவின் பேரில், சகாயீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, இன்று காலை போலீஸார் உதவியுடன் அறநிலையத் துறை அதிகாரிகள் சென்றனர். பின்னர், அங்கு கட்டப்பட்டிருந்த 11 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுதா, தேவி, சந்தியா, யோகேஷ் ஆகிய 4 பேரும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் அவர்களை மீட்டனர். பின்னர், அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 11 கடைகளுக்குச் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

x