புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக வேட்பாளரான செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காலியாக இருக்கும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு, யார் வேட்பாளரை நிறுத்துவது என்பது ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நடந்தது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் என். ஆர். காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அசைந்து கொடுக்காத நிலையில், வேறு வழியில்லாமல் பாஜக மேலிடம் தனது வேட்பாளரை டெல்லியில் இருந்து தன்னிச்சையாக அறிவித்தது.
அதோடு மட்டுமில்லாமல், அவரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மூலம் ரங்கசாமிக்கு அழுத்தமும் கொடுக்கப்பட்டது. டெல்லி சென்ற நமச்சிவாயமும் மேலிடத் தலைவர்கள் மூலம் ரங்கசாமியிடம் இதை வலியுறுத்த வைத்தார். இதனால், வேறுவழியின்றி பாஜக வேட்பாளரை ஏற்றுக்கொண்டார் ரங்கசாமி.
இந்நிலையில், இன்று (செப்.22) பாஜக வேட்பாளர் செல்வகணபதி பாஜக உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட என் .ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த ஆட்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டவர் இந்த செல்வகணபதி. பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் சாமிநாதனின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு அவ்வளவாகப் பிடிக்காத காரணத்தினால், செல்வகணபதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்றுவரை, அங்கீகாரம் இல்லாத 3 சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக உள்ளிட்ட இதர அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வாக உள்ளார். இதன் மூலம் புதுச்சேரியி லிருந்து மாநிலங்களவைக்கு தனது முதல் எம்பி-யை அனுப்புகிறது பாஜக.