முரட்டு சிங்கிள்களுக்கு ஜோடி தேடும் கேரள கிராம பஞ்சாயத்து!


இந்திய ஜனநாயகம் 3 அடுக்குகளைக் கொண்டது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, ஊராட்சி மன்றம் என்பவையே அந்த 3 அடுக்குகள். இதில் கிராமப் பஞ்சாயத்துகள் நாட்டுக்கே வழிகாட்டியாக இருப்பது கேரளத்தில்தான். கல்வியறிவு மட்டுமில்லை, சிந்தனையும் மனிதர்களின் நலன்களையே நாடுவதால், நம் பஞ்சாயத்தில் வசிப்பவர்களுக்கு எது பிரச்சினை என்று அதுவாகவே பார்த்துத் தீர்த்து வைக்கிறது.

கேரளப் பஞ்சாயத்துகள் பல்வேறு செயல்களை மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திடநாடு புதிய வரலாறு படைத்திருக்கிறது.

ஆண்களிலும் பெண்களிலும் பலர் திருமண வயதை எட்டியிருந்தாலும் துணை சேராமல் தனியாகவே இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்டது. தானாகவே முன்வந்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ‘திருமண டயரி’ என்ற பேரேட்டைத் திறந்து வைத்தது.

சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர்ப் பாதை, பள்ளிக்கூடம், போக்குவரத்து, சுகாதாரம் என்று அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு நிற்காமல், தங்களுடைய பஞ்சாயத்தில் மக்களுக்கு என்ன பிரச்சினை என்றும் ஆராய்ந்தது திடநாடு.

‘திருமண டயரி’

ஆண்களிலும் பெண்களிலும் பலர், திருமண வயதை எட்டியிருந்தாலும் துணை சேராமல் தனியாகவே இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்டது. தானாகவே முன்வந்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், ‘திருமண டயரி’ என்ற பேரேட்டைத் திறந்து வைத்தது. திருமணம் ஆகாத ஆண், பெண் ஆகியோர் தங்களுடைய வயது, கல்வித் தகுதி, தொழில், வருமானம், வீட்டு முகவரி, விரும்பினால் சமுதாய அடையாளம் ஆகியவற்றை அதில் பதிவு செய்துகொள்ளலாம். அத்துடன், அதில் பதிவு செய்துள்ள மற்றவர்களைப் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் ஜோடிகள் சேர முடிகிறது.

கிராமத்திலிருந்த பெரும்பாலான தனியர்கள் பதிவிடத் தொடங்கியதால், இதை ஆன்-லைன் பதிவாகவே மாற்றிவிட்டார்கள். விளைவு இந்தக் கிராமம் மட்டுமல்ல, கேரளத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் தங்களுக்கேற்ற இணையரைத் தேட முடிகிறது. இணையத்தில் வந்துவிட்டதால் இன்னொரு வசதி, அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று மேற்கொண்டு பேச்சைத் தொடர முடியும். இதனால் துணை தேவை என்பதும் வெளியில் தெரிகிறது, வேறு தகவல்களும் அந்தரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. இங்கே பதிவும் இலவசம், பகிர்வும் இலவசம்.

இந்தத் திட்டத்துக்கு மூல காரணமான விஜி ஜார்ஜ், திடநாடு கிராம பஞ்சாயத்தின் தலைவர். பஞ்சாயத்தின் சுகாதார, கல்வி நிலைக்குழுக்களின் தலைவரான ஷெரின் ’பெருமகுன்னெல்’ இந்த சேவையை ஒருங்கிணைக்கிறார். இப்போது இந்த சேவையில் மாநிலத்தின் பிற பஞ்சாயத்துத் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான மக்களாட்சி பஞ்சாயத்து!

x