சமீபகாலமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக ‘டிரைவ் எகெய்ன்ஸ்ட் ட்ரக்ஸ்’ (drive against drugs) எனும் பெயரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும்படி, காவலர்களுக்கு சென்னைப் பெருநகரக் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் பெயரில் இன்று (செப்.21) முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில், உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் ஆகியோர் ராயப்பேட்டை பகுதியில் உள்ள வெஸ்லி பள்ளி மாணவர்களை அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களை இனம்கண்டு அவர்களிடம் இருந்து போதைப்பொருள்களுக்கு அடிமையாகாமல் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன், காவல் துறையினரும் கலந்துகொண்டனர்.