சென்னை கோடம்பாக்கத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சாலையில் எரிந்த நிலையில் ஆம்னி கார்

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இன்று (செப்.21) காலை சென்றுகொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றிலிருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தார்.

அப்போது காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு அவர் தகவல் அளித்தார். அதன்பேரில் அசோக் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், காரின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்...

தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். காரை ஓட்டிவந்த மணிகண்டன்(45), கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாகக் காய்கறிகளை வாங்கிவந்து கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்குக் காய்கறிகளை விநியோகம் செய்துவந்தது விசாரணையில் தெரிந்தது.

இன்று காலை வழக்கம் போல் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மணிகண்டன், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது தூரம் சென்றதும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகக் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இத்தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

x