அண்ணாமலை தான்... அண்ணாமலை ஐபிஎஸ் இல்லை!


அண்ணாமலை

அரசியலில் எத்தனையோ விநோதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் விநோதத்திலும் விநோத சர்ச்சைகள் கோவை பாஜகவில்தான் வெடிக்கும் போலிருக்கிறது. லேட்டஸ்ட் சர்ச்சை அண்ணாமலை குறித்து போலீஸ் எஸ்.ஐ ஒருவர் பேசிய பேச்சின் ஆடியோ.

“அண்ணாமலைன்னா அண்ணாமலைதான். அதில் என்ன கூட ஐபிஎஸ்ன்னு சேர்த்து சொல்றீங்க. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அண்ணாமலைன்னு சொல்லுங்க போதும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ பேசியதை யாரோ அப்படியே ரெக்கார்ட் செய்து ஆடியோவாக வாட்ஸ்- அப், சமூகவலைதளங்களில் வலம் வரவைத்துவிட்டார்கள். விளைவு, இன்று மாலை கோவை பாஜக அந்த எஸ்.ஐ-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் கோவை பாஜகவின் ராமநாதபுரம் மண்டல் தலைவர் ஏ.டி.ராஜன்.

‘‘குறிப்பிட்ட சமூகத்தினர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளனர். அதை விசாரித்த பெண் எஸ்.ஐ ஒருவர், இது சம்பந்தமாய் பஞ்சாயத்து பேசியுள்ளார். அப்போது பேச்சுவாக்கில் அந்த எஸ்.ஐ-யிடம் எங்கள் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் பெயரை எங்கள் கட்சிக்காரர் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த எஸ்.ஐ, ‘அதென்ன அண்ணாமலை ஐபிஎஸ்... வெறும் அண்ணாமலை தான். இனிமே இப்படி ஐபிஎஸ் பதவியை எல்லாம் சேர்த்து சொல்லாதீங்க’ என்றதோடு எங்கள் தலைவரை ஏக வசனத்திலும், ஒருமையிலும் பேசியுள்ளார்.

இதை ஆடியோ பதிவு செய்தவர்கள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த குழுவினருடன் வாட்ஸ் - அப், சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அது எப்படியே எங்களுக்கும் பகிரப்பட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் எங்கள் மாநிலத் தலைவர். அரசின் முக்கியப் பதவியில் இருந்தவர். அவர் வகித்த பதவியை கொச்சைப்படுத்துவதோடு, தற்போது அவர் வகிக்கும் கட்சிப்பதவிக்கும் மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படி போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்கள் பலவற்றிலும், கீழ்நிலை ஊழியர்கள்கூட பாஜகவினரை மதிப்பதில்லை. மதிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. ரொம்பவும் கொச்சைப்படுத்துகிறார்கள்; ஏளனப்படுத்துகிறார்கள். அதைக் கண்டித்துத்தான் இன்று மாலை ஆர்ப்பாட்டம் வைத்துள்ளோம். இந்த நிலை இனியும் தொடர்ந்தால் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச்செல்வோம்!’’ என்று சொன்னார் ராஜன்.

x