புதுவை ராஜ்யசபா தேர்தல்; சிரித்து மழுப்பும் ரங்கசாமி!


புதுச்சேரி சட்டமன்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு அக் 4 -ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாளை 22 - ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் தமிழகத்திலுள்ள இரண்டு இடங்களுக்கும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டனர். ஆனால், புதுச்சேரியில் இருக்கும் ஒரு இடத்துக்கு எந்தக்கட்சி வேட்பாளரை நிறுத்தப்போகிறது? யார் வேட்பாளர் என்பது இதுவரையிலும் யாருக்கும் தெரியவில்லை.

அங்குள்ள ஒவ்வொரு கட்சியும் எந்தவிதமான திட்டத்தை தீட்டியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

பாஜக

மத்திய இணையமைச்சர் எல்.முருகனை புதுச்சேரியிலிருந்து தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது. தங்களிடம் இருக்கும் ஆறு எம்எல்ஏ-க்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸின் பத்து எம்எல்ஏ-க்கள் ஆதரவில் சுலபமாக அவரை உறுப்பினராக்கிவிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால், ரங்கசாமி இதை ஏற்கவில்லை. காரணம், ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பே நியமன எம்எல்ஏ-க்களை தாங்களாகவே நியமித்துக் கொண்டதையும், துணை முதல்வர் கேட்டு அவர்கள் கொடுத்த அழுத்தத்தையும் அவர் மறக்கத் தயாராக இல்லை.

அமைச்சர்கள் பங்கீட்டிலும் பாஜக காட்டிய பிடிவாதம் அவரை பாதித்திருந்தது. எனவே, தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும், அப்போது பார்க்கலாம் என்று அவர் காத்திருந்தார். தற்போது அந்த சந்தர்ப்பம் வந்திருப்பதாக அவர் கருதுகிறார். தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கெஞ்சிய பாஜகவினரை அவர் தொடர்ந்து உதாசீனப்படுத்தினார். அதன் விளைவாகவே மத்தியப் பிரதேசத்திலிருந்து எல்.முருகனை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது பாஜக தலைமை.

எல்.முருகன் பிரச்சினை தீர்ந்தாலும் பாஜக தலைமை புதுவையை அப்படியே விட்டுவிட தயாராகயில்லை. மாநில தலைவர் சாமிநாதனை மாநிலங்களவை உறுப்பினராக்கலாம் என்று ஆசைப்பட்டது. அதனால் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை ஒன்றுதிரட்டி தீர்மானமெல்லாம் போட்டு ரங்கசாமியிடம் கொடுத்தது. அதை வாங்கிவைத்துக்கொண்டு சிரித்தார் ரங்கசாமி. உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், சாமிநாதனும் திரும்பவும் போய் சந்தித்தனர். அப்போதும் சிரித்தாரே தவிர எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. அதனால் துணை நிலை ஆளுனர் தமிழிசை மூலமும் காய்நகர்த்தி பார்த்தது பாஜக. அவரிடமும் சிரித்து மழுப்பிவிட்டு வந்துவிட்டார் ரங்கசாமி.

பாஜக தலைவர்களுடன் ரங்கசாமி

என்.ஆர்.காங்ங்கிரஸ்

தங்கள் கட்சிக்குத்தான் உறுப்பினர் என்பதை ரங்கசாமி உள்ளுக்குள் முடிவுசெய்துவிட்டதாகவே தெரிகிறது. முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், முன்னாள் எம்பி-யான நாராயணசாமி உள்ளிட்ட சிலர் சீட்டை எதிர்பார்த்திருக் கிறார்கள். தங்கள் உறுப்பினர்கள் பத்து பேர் இருப்பதால் பாஜக இல்லாவிட்டாலும், தனது ஆதரவு சுயேச்சைகள் மற்றும் வேறு சில உறுப்பினர்கள் ஆதரவில் வெற்றிபெற்றுவிட முடியும் என்று ரங்கசாமி நம்புகிறார். கடைசிவரை இழுத்தடித்துவிட்டு கடைசிநேரத்தில் வேட்பாளரை அறிவிப்பது அவரது வழக்கமான பாணிதான்.

ரங்கசாமியை சந்தித்த ஐசரிகணேஷ்

இடையில் புகுந்த ஐசரி கணேஷ்

இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று திடீரென்று உள்ளே புகுந்திருக்கிறார் திரைப்பட தயாரிப்பாளரும், கல்வித் தந்தையுமான ஐசரி கணேஷ். என்னதான் பணம் வைத்திருந்தாலும் பதவிக்கு உள்ள மரியாதை பணத்துக்கு கிடைப்பதில்லை, ஆகவே எப்படியாவது எம்பி ஆகிவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கும் ஐசரி கணேஷ், தன்னை தேர்ந்தெடுத்தால் ரங்கசாமிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் கசிகின்றன. அதையும் சிரித்தபடி கேட்டுக்கொண்ட ரங்கசாமி, அவருக்கு அப்பாசாமி பைத்தியம் கோயிலின் பிரசாதத்தைக் கொடுத்து வழியனுப்பினார்.

ஜெகத்ரட்சகன்

திமுக

பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் இடையே இருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறது திமுக. தங்களிடமுள்ள 6 உறுப்பினர்களுடன் காங்கிரஸின் 2 எம்எல்ஏ-க்களையும் சேர்த்தால் திமுக கூட்டணிக்கு எட்டு ஓட்டுகள் உள்ள நிலையில் சுயேச்சைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவில் அதிருப்தியில் உள்ளவர்கள் சிலரை சாதுர்யமாக வளைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்பது ஜெகத்ரட்சகனின் கணக்கு. அதற்காக அவரது அக்கார்ட்ஸ் ஹோட்டலில் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இப்படி ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக திட்டங்களை போட்டு வரும் நிலையில் நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைய இருக்கிறது. புதுச்சேரி குழப்பங்கள் நாளைக்காவது தீருமா அல்லது தேர்தல் நாள் வரை நீடிக்குமா என்பது அந்த ரங்கசாமிக்கே தெரிந்த ரகசியம்.

படங்கள் எம்.சாம்ராஜ்

x