கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை கிடைப்பது எப்போது?


கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு அறிவித்திருந்த உதவித்தொகை கிடைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு அறிவித்த உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. அதுதொடர்பான விசாரணை கூட தொடங்கப்படாமல் இருப்பது, பாதிக்கப்பட்டோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவியது. கரோனா தொற்றின் முதல் அலை முடிவுக்கு வந்தபின்பு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தான் கரோனா தடுப்பூசி கிடைத்து வந்தது. 2-வது அலையின் கோரதாண்டவத்துக்குப் பின்னரே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இப்போது இந்தியாவில் உலகநாடுகளே வியக்கும் வண்ணம் விரைவாகவும், தினசரி அதிக எண்ணிக்கையிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றால் பெற்றோர்களில் இருவருமோ, அல்லது ஒருவரோ உயிர் இழந்து வறுமையில் வாடும் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும்வகையில் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டன. இதில், தமிழக அரசு அறிவித்த நிவாரணைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்யாமல் உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், அவர்களைப் பராமரிக்கும் உறவினர்களுக்கு மாதாந்திர நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது.

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்குவதாகவும், அவர்களின் கல்விக்கு உதவுவதாகவும் அறிவித்திருந்தது. ஆனாலும் இதுவரை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கைகளுக்கு மத்திய அரசின் எவ்வித நிவாரணமும் வந்துசேரவில்லை.

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், உடனே இதற்கான பணிகளை தொடங்கவேண்டும் என்பதுதான், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x