‘காந்தி ஜெயந்தி’யை விடுமுறை தினமாக மட்டும் பார்ப்பது அநீதி!


பதாகைகளுடன் காந்தி ஆசிரமத்தினர்...

'காந்தி ஜெயந்தி என்பது இதுவரை பள்ளி - கல்லூரிகளில் மட்டுமல்ல, அரசுத் துறை அலுவலகங்களில் கூட அது ஒரு விடுமுறை நாளாகவே பின்பற்றப்படுகிறது. அப்படி செய்வது காந்திக்கும், காந்திய சமூகத்துக்கும் நாம் இழைக்கும் அநீதி. மாறாக, காந்தி பிறந்தநாளன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் காந்தி படத்திறப்பு செய்து, அவர் போதனைகளை எடுத்துரைத்து, மாணவ - மாணவியருக்கு காந்திய சிந்தனை மிகுந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளை அறிவித்து, விழாவாகக் கொண்டாட வேண்டும்!’ இப்படியொரு கோரிக்கையை பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தினர் வைத்துள்ளனர்.

பேனர் எந்தி...

பொள்ளாச்சி ஆனைமலையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக காந்திய சேவை செய்து வரும் அமைப்பு மகாத்மா காந்தி ஆசிரமம். இதன் நிறுவனத்தலைவர் ரங்கநாதன், ஆசிரமவாசிகளுடன் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

‘அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி ஒரு சாதாரண விடுமுறை தினம் அல்ல... தேசமே அதைக் கொண்டாட வேண்டும், காலாண்டு விடுமுறையிலே வந்துபோகும் காந்தி ஜெயந்தியை பள்ளி - கல்லூாிகளில் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனுவை அளித்தனர். தொடர்ந்து ரங்கநாதனிடம் பேசினோம்.

ரங்கநாதன்

‘‘இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி 152-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே காந்தி ஜெயந்திக்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுவது வழக்கம். அதன் பிறகு, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-க்குப் பிறகு 3 அல்லது 4 தேதிகளில்தான் பள்ளிகள் திறக்கப்படுவது உண்டு. அதனால் காந்திஜெயந்தி என்பது ஞாயிற்றுக்கிழமை போல் ஒரு அரசு விடுமுறை தினமாகவே உள்ளது. அதற்காக விடப்பட்டது அல்ல காந்தி ஜெயந்திக்கான விடுமுறை. காந்தியக் கொள்கைகள் மக்களிடம் பரவ வேண்டும். புதிய தலைமுறைகள் காந்தியின் சத்தியம், அஹிம்சை, கிராமப் பொருளாதாரம் உள்ளிட்ட கோட்பாடுகளை கற்று நாட்டில் அமைதி தவழப் பாடுபட வேண்டும். அதற்கான போதனைகளை முழுமையாகச் செய்யும் நாளாக இது விளங்க வேண்டும் என்பதுதான் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதன் நோக்கம்.

தற்போது ஐக்கியநாடுகள் சபை காந்திஜெயந்தியை உலக அஹிம்சை தினமாகவும் அறிவித்துள்ளது. ஐநா சபையே இப்படி அறிவிப்பு வெளியிடும்போது, நாம் நம் நாட்டில் காந்தியை காந்தி ஜெயந்தியன்று இன்னமும் நிறைவாகக் கொண்டாட வேண்டும். பள்ளி - கல்லூாரிகளில், அரசு அலுவலகங்களில் காந்தியின் படங்களை வைத்து, அவர் போதனைகள் வாசித்து அனைவருக்கும் அதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இத்தனை காலமும் இதையெல்லாம் செய்யாமல் விட்டதால்தான் ஒரு தலைமுறையே காந்தியைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் தெரியாமல் இருக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலேயே சில இளைஞர்கள் கையில் கத்தியும், மனதில் வன்மத்தையும் வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள். இதெல்லாம் மாறவேண்டுமானால், காந்திய சிந்தனைகளும் கொள்கைகளும் இளம்பருவத்தினர் மத்தியில் இன்னும் ஆழமாக விதைக்கப்பட வேண்டும். அதற்கு நாம் காந்தி ஜெயந்தியை முறையாகக் கொண்டாட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை செம்மைப்படுத்த வேண்டும். இதையெல்லாம் தான் மாவட்ட ஆட்சியரிடம் சேர்க்க கோரிக்கை மனுவாகக் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

x