சமீப காலமாக, பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் ராஜினாமா செய்து, புதிய முதல்வர்கள் பதவியேற்பதைப் பார்க்க முடிகிறது. முதல்வர்களின் ஆட்சித்திறன் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதாகத் தோன்றினால், மோடி - அமித் ஷா ஜோடி பல வகைகளில் அழுத்தம் கொடுத்து, அவர்களை மாற்றிவிடுகிறது என்று பரவலான பேச்சு எழுந்திருக்கிறது.
ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு அதிருப்திக் கணைகளை, விமர்சனங்களை எதிர்கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டும் இந்தப் பட்டியலில் அடங்காதது ஏன் என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. 2022-ல், உபி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், யோகியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையிலான வேலைகளில் மோடியே இறங்கியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
சமீபத்தில் குஜராத் முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்த விவகாரத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுணக்கம் முக்கியக் காரணமாக இருந்தது. சொல்லப்போனால், அவருக்கு முன்பு முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல், உனா சம்பவம், பாடிதார்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமித் ஷா தந்த அழுத்தத்தால் பதவி விலகியவர்தான்.
மக்களின் அதிருப்தியை மறக்கடிக்க, கூண்டோடு மாற்றம் செய்வதும் பாஜக தலைமையின் வழக்கமாகியிருக்கிறது. குஜராத்தில் தற்போது பதவியேற்றிருக்கும் 24 அமைச்சர்களில் ஒருவர்கூட, விஜய் ரூபானி அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அல்ல என்பதே இதற்கு உதாரணம். குஜராத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் பூபேந்திர படேலும், அதிகம் அறியப்படாத தலைவர்தான். முன்னதாக 2017-ல் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக இதே உத்தியைத்தான் அமல்படுத்தியது. அதில், ஏற்கெனவே மாநகராட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு அந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முற்றிலும் புதுமுகங்களைக் களமிறக்கிப் பெரும் வெற்றி பெற்றது பாஜக.
இப்படி அடுத்தடுத்து முதல்வர்கள் மாறிக்கொண்டிருப்பதை (அதாவது, மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை) தொடர்ந்து, ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கும் கிலி பிடித்துவிட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நிலையில் டெல்லிக்குச் சென்று மோடியைச் சந்தித்து நிலைமையை விளக்கியிருக்கிறார். இமாச்சல பிரதேச பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும் சமீபத்தில் மோடியைச் சந்தித்துப் பேசியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி பிற மாநிலங்களில் அதிரடியாக ஆள்மாற்றம் செய்யும் பாஜக தலைமை, யோகி ஆதித்யநாத்துக்கு மாற்று முகம் தேடாதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
புகார்களும் விமர்சனங்களும்
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய யோகி, உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீராக இருப்பதாகவும், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதை அம்மாநில காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இதற்கு ஆதாரமாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளை அக்கட்சி முன்வைத்திருக்கிறது. அம்மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடக்கின்றன; 55 பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன; பட்டியலினச் சமூக மக்கள் மீது 32 சாதிய ரீதியிலான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என்று காங்கிரஸ் கொந்தளிக்கிறது.
கிரிமினல்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது உபி-யைவிட்டே வெளியேறிவிட்டார்கள் என அடிக்கடி சொல்லிக்கொள்கிறார் யோகி. ஆனால், குற்றங்கள் மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்வது எப்படி என்று கிடுக்கிப்பிடி போடுகிறது காங்கிரஸ்.
யோகியின் ஆட்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் முறைகேடுகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், கீழ்மட்ட அளவிலான லஞ்சம், முறைகேடுகள் போன்றவை இன்னமும் தொடர்கின்றன.
உபி-யில் கரோனா பரவல் ஏற்படுத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து, தற்போது டெங்கு காய்ச்சல் பரவலும் அம்மாநில மக்களை அச்சுறுத்துகிறது. ஆனால், கரோனா பரவல் விஷயத்தில் சுணக்கம் காட்டியது போலவே டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் யோகி அரசு தீவிரம் காட்டவில்லை என்றும், மாறாக வெறுப்புப் பேச்சுகள் மூலம் வாக்குகளைத் திரட்டும் வேலைகளில் இறங்கிவிட்டார் யோகி என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
சரிக்கட்டும் முயற்சிகள்
அதேவேளையில், இந்தச் சூழலை மாற்றும் பணிகளில் ஏற்கெனவே பாஜக இறங்கிவிட்டது. இன்றைக்குக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உத்தர பிரதேசம் முன்னணியில் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இறுக்கமான முகமும், கண்டிப்பான வார்த்தைகளுமாக வலம் வரும் யோகியின் கெடுபிடியான நடவடிக்கைகள் உபி மக்களுக்குப் பாதுகாப்பளிக்கத்தான் எனும் பிம்பம் மீண்டும் வலுவாகக் கட்டமைக்கப்படுகிறது.
முந்தைய அரசுகளின்கீழ் உத்தர பிரதேசம் அடிப்படை விஷயங்களில்கூட முன்னேற்றம் அடையவில்லை என்றும்; தனது ஆட்சிக்காலத்தில்தான் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் மீண்டும் மீண்டும் பேசிப் பதிவுசெய்கிறார் யோகி. 6 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டை நோக்கி உபி நகர்வதாகப் பெருமிதத்துடன் சொல்கிறார். எல்லாவற்றையும் தாண்டி தனது அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் விஷயங்களையும் முன்வைக்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் மோடியின் புகழ்பாடவும் அவர் தயங்குவதில்லை.
இத்தனைக்கும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் யோகி அரசு தவறியதால், மோடி அதிருப்தியடைந்திருப்பதாகச் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. யோகியின் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்து சொல்லாதது, மாநில முதல்வர்களுடனான மோடியின் கூட்டத்தில் யோகி கலந்துகொள்ளாதது என பல்வேறு விஷயங்கள், இருவருக்கும் இடையில் கசப்புணர்வு உருவாகிவிட்டதோ எனும் ஊகங்களைக் கிளப்பின. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் டெல்லிக்குச் சென்று மோடியை யோகி சந்தித்துப் பேசிய பின்னர் இந்த ஊகங்கள் முற்றுப்பெற்றன. அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், யோகி, மோடியைச் சந்திப்பதற்கு முன்பு அமித் ஷாவை சந்தித்துப் பேசினார் என்பதுதான்.
அமித் ஷாவைக் கவர்ந்தவர்
2017 உ.பி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், முதல்வர் பதவிக்கு யோகி தேர்ந்தெடுக்கப்பட்டபோது பாஜகவிலேயே பலருக்கும் ஆச்சரியம்தான். மோடி - அமித் ஷா ஜோடிதான் அவரை முன்னிறுத்தியது. அதிலும் அமித் ஷாதான் அதிக ஆர்வம் காட்டினார்.
2014 மக்களவைத் தேர்தலின்போது யோகியின் தேர்தல் செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்த அமித் ஷாவுக்கு, அப்போதே அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அந்தத் தேர்தலுக்குப் பின்னர், உ.பியில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டபோதும், அதற்கு யோகியைப் பொறுப்பாக்காமல் அமித் ஷா காத்து நின்றார்.
பாஜகவுக்கான ஆதரவுத் தளத்தைக் தக்கவைக்கும் அளவுக்குத் தீவிரமான மேடைப் பேச்சு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பதில் காட்டிய கடின உழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இன்றும் யோகிக்குச் சாதகமாக இருக்கின்றன. முஸ்லிம்களைக் குறிவைத்து அவர் சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சுக்கள், இந்து சமூகத்தினரின் வாக்குகளை ஒன்றுதிரட்டுவதற்கான வழக்கமான அஸ்திரம்தான் என்றே கருதப்படுகிறது.
இன்றையச் சூழலில், மோடிக்குப் பிறகு பாஜகவின் முகமாக யோகிதான் அறியப்படுகிறார். மறுபுறம், அமைப்பை மீறிய ஒற்றை ஆளுமை எனும் பிம்பமாக மோடி நிலைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக மோடிக்கு இணையான தலைவராக யோகியை ஆர்எஸ்எஸ் வளர்த்தெடுப்பதாகவும் சிலர் கருதுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்காத யோகிக்கு, பாஜகவுக்குள் ஆதரவு கணிசமாகவே இருக்கிறது. அது தேர்தல் வெற்றியாகவும் மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!