மக்கள் உணர்வுகளைச் சட்டென தூண்டுகிற சில விஷயங்களை அரசியலுக்குப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. முதலில் பலன் தரும் அந்தப் பிரச்சினை, இன்னொரு நாள் அப்படி அரசியலுக்குப் பயன்படுத்தியவர்களையே வீழ்த்திவிடும். இலங்கை பிரச்சினையை இங்கே பேசி, அதற்காக எம்எல்ஏ பதவியைக்கூட ராஜினாமா செய்து, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொட்ட திமுக பிற்காலத்தில் அதே பிரச்சினையால் ஆட்சியை இழந்தது. கலைஞரின் தமிழினத் தலைவர் என்கிற பட்டத்தையும் அது பதம் பார்த்தது. அதைப்போலவே இப்போது நீட் பிரச்சினையும் பூமராங்போல திரும்பி வரத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையா, தேவையில்லையா? நீட் தேர்வால் என்ன லாபம், என்ன நஷ்டம்? நீட் தேர்வை யார் கொண்டுவந்தது, அப்போது மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தது யார்? கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாமல் வைத்திருந்த நீட் தேர்வை, தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்த அனுமதித்தது யார்? நீட் தேர்வுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறத்தவறியது யார் என்று நிறையப் பேசியாகிவிட்டது. நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டும் இதுவரை 3 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
“திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்தநாளே நீட் ரத்து செய்யப்படும். அதற்குத் தேவை கொஞ்சம் மானம், கொஞ்சம் சூடு, கொஞ்சம் சொரணை அவ்வளவுதான்” என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசியதைச் சுட்டிக்காட்டி, திமுகவிடம் கேள்வி கேட்கிறார்கள் எதிர்க்கட்சியினர். “கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. தமிழ்நாடு அரசால் மட்டும் தனித்து எதையும் செய்துவிட முடியாது” என்று விளக்கம் தருகிறார்கள் திமுகவினர். “ஒன்று தேர்வை ரத்து செய்யுங்கள். இல்லை என்றால், இந்த ஆண்டு கண்டிப்பாக தேர்வு உண்டு, மாணவச் செல்வங்களே படியுங்கள் என்று திமுக அரசு சொல்ல வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பலமுறை சொன்னார். அவருக்கு இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? என்பது வேறு விஷயம். ஆனால், திமுக இந்த விஷயத்தில் கொஞ்சம் தீவிரமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். பாம்பை அடிக்க முடியும் என்றால் அடிக்கலாம். முடியாது என்று தோன்றினால் நடப்பது நடக்கட்டும் என்று விட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக தேவையில்லாமல் பாம்பைச் சீண்டி, நம் வீட்டுப் பிள்ளைகளை பலிகொடுத்துவிட்டது என்று பதறுகிறார்கள் பெற்றோர்.
அதிமுகவுடன் ஒப்பிடுகையில், திமுக அரசின் செயல்பாடு ஒரு படி மேல்தான். ஆனால், அனிதாவின் உயிர் தமிழ்நாட்டில் எத்தகையை அதிர்வலையை ஏற்படுத்தியது என்பதை உணர்ந்த கட்சியான திமுக, நீட் தேர்வு நேரத்தில் இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடனாவது இருந்திருக்க வேண்டும். தற்கொலை நிகழ்ந்த பிறகு மனநல ஆலோசனை வழங்கவும், தற்கொலை எண்ணத்தைத் தடுக்கவும் வழிமுறைகளைச் சொல்பவர்கள், மையங்களைத் திறப்பவர்களால் அதை ஏன் முன்பே செய்ய முடியவில்லை? என்ற கேள்வி சுடத்தான் செய்யும்.
திமுக ஒன்றுமே செய்யவில்லையா?
மூத்த நாடாளுமன்றவாதியான பீட்டர் அல்போன்ஸிடம் நீட் பிரச்சினைக்கான தீர்வு பற்றி காமதேனு பேட்டிக்காக கேட்டபோது, அவர் கொஞ்சம் நிதானித்து ஒரு கருத்தைச் சொன்னார். "கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால், நம்மைப் பொறுத்தவரையில் 2 வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, நீட் தேர்வால் எங்கள் மாநில மாணவர்களுக்குப் பெரிய அநீதி நடக்கிறது. எனவே எங்களுக்கு விலக்கு தேவை என்று மத்திய அரசை ஒப்புக்கொள்ள வைப்பது. இரண்டு, உச்ச நீதிமன்றத்தை நாடி நீட்டை ரத்து செய்யக் கோருவது. இந்த இரண்டு முயற்சிகளுக்கும் தரவுகள் ரொம்ப முக்கியம். எனவேதான் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆவணப்படுத்துகிறார்கள். கலைஞர் கையாண்ட உத்தி. சிறுபான்மை மக்களுக்கு கலைஞர் இடஒதுக்கீடு கொடுக்க முயன்றபோது, நீதிமன்றத்தில் இது ரத்து செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பழைய தீர்ப்புகளை எல்லாம் படித்து அந்தத் தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் எதிர்கொண்டு, அதற்கான முன்னேற்பாடுகளுடன்தான் சட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர். அதே அணுகுமுறையை ஸ்டாலினும் கடைபிடிப்பதால், இந்த முயற்சி வெற்றியடையும் என்றே நம்புகிறேன்" என்றார்.
உண்மைதான், அதன்படி முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து பற்றி ஆராய ஆணையம் அமைத்தார். ஆனால், குறித்த தேதியில் அதன் அறிக்கை வரவில்லை. சரி அறிக்கை வந்த பிறகாவது அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார்களா? என்றால் மெத்தனமே மிஞ்சியது. ஒரு மாணவர் இறந்த பிறகு அவசர அவசரமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுபவர்கள், அதை முன்பே செய்துவிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கலாம் இல்லையா?
மாநில உரிமைகளுக்காக முதல் குரல் எழுப்புகிற கட்சி திமுக என்பது உண்மையென்றால், இந்தப் பிரச்சினைக்காக வீதியில் இறங்கி போராடியிருக்க வேண்டாமா? தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கீடு கேட்டு முதல்வர் எம்ஜிஆரும், காவிரி பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவும், ஈழப் பிரச்சினையில் கருணாநிதியும் போராட்டம் நடத்திய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. குறைந்தபட்சம் மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற வீரியமிக்க கூட்டணிக் கட்சிகளையாவது போராட வைத்து, மத்திய அரசுக்கு நெருக்கடி தந்திருக்கலாம். செய்யத் தவறிவிட்டது திமுக அரசு.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் தேவையற்ற வீம்பு காட்டி வருவதையும் சொல்லியாக வேண்டும். என்ன நடந்தாலும் நீட் நடந்தே தீரும் என்று திமுகவை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தின் வெகுஜன கோரிக்கைக்கு எதிரான கருத்தைச் சொன்னார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்தப் பிரச்சினை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் கேட்டபோது, "பொதுப் பட்டியலில் உள்ள கல்வி குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுகிறபோது மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிற பரிந்துரையையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை. 2006-ம் ஆண்டு தமிழகத்தில் தொழிற்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழகம் இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அண்ணா காலத்தில் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எம்ஜிஆர் காலத்தில் தொழில் தாவா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 2017-ல் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக பொதுப்பட்டியலில் இருந்த மிருகவதை பற்றிய சட்டத்தில் தமிழகம் கொண்டுவந்த சட்டம் ஏற்கப்பட்டது. இப்படி, இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களில் தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு தரப்பட்டதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. அதில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டமும் ஒன்று. ஆனால், நீட் விஷயத்தில் வீணாக முரண்டு பிடிக்கிறது மத்திய அரசு. இந்தப் போக்கு இப்படியே தொடர்ந்தால், மத்திய - மாநில உறவில் கசப்பும் எரிச்சலுமே அதிகரிக்கும்" என்றார்.
யப்பா அரசியல்வாதிகளே... போதும் உங்கள் அரசியல். மாணவச் செல்வங்களை வாழ விடுங்கள்!