இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கோவையைச் சேர்ந்த டீக்கடைக்காரர், ஒருநாள் முழுக்க இலவச டீ, காபி கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.
கோவை, கணபதி மார்க்கெட் பகுதியில் செல்வம் பேக்கரியை நடத்தி வருபவர் ‘தாமரை’ சேகர். பாஜகவின் கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் நரேந்திரமோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, இன்று ஒருநாள் முழுவதும் தனது கடைக்கு வரும் அனைவருக்கும் காபி, டீ இலவசம் என அறிவித்துக் கொண்டாடி வருகிறார். காலையில் வந்தவர்களுக்கு கூடுதல் இணைப்பாக கேக் சப்ளையும் நடந்தது. சேகரை சந்தித்துப் பேசினோம்.
‘‘நரேந்திர மோடியின் அப்பா குஜராத்தில் டீ விற்பவராக வாழ்க்கை நடத்தியிருக்கிறார். அவருக்கு உதவியாக மோடி இருந்துள்ளார். அப்படிப்பட்ட மோடி இன்றைக்கு நாட்டின் உயர் பதவியில் இருக்கிறார். நானும் டீக்கடை வைத்துள்ளேன். பாஜகவின் அடிமட்டத் தொண்டனாக இருந்து வரும் நான், கடந்த 4 வருடங்களாகவே மோடியின் பிறந்தநாளுக்கு எனது கடைக்கு வருபவர்களுக்கு இலவச டீ, காபி விநியோகித்து வந்துள்ளேன். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு டீ விநியோகித்தேன். இன்று காலை 11 மணிக்குள் 800 டீ, காபி கொடுத்தாகிவிட்டது. மாலைக்குள் இந்த கணக்கு இரண்டாயிரத்தை தாண்டிவிடும்’’ என்றார்.