ரேஷன் கடைகளுக்கு நேரடி மண்ணெண்ணெய் கொள்முதலுக்கு தடை கோரி வழக்கு: குமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு


மதுரை: குமரி மாவட்ட ரேசன் கடைகளுக்கு ஒப்பந்த வாகனங்களை தவிர்த்து விற்பனையாளர்கள் நேரடியாக மண்ணெண்ணெய் கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "கன்னியாகுமரி மாவட்டத்தில் 765 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மண்ணெண்ணெய் விநியோகம் செய்கிறது. மாதம் தோறும் ரேஷன் கடைகளுக்கான மண்ணெண்ணெய், ஒப்பந்த வாகனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தங்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சென்று கொள்முதல் செய்யுமாறு ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த வாகனங்கள் இல்லாமல் உரிய உரிமம் இல்லாத வாகனங்களில் மண்ணெண்ணெய் எடுத்து வருவது பாதுகாப்பானதாக இல்லை. தீவிபத்து தடுப்பு உபகரணங்கள், காப்பீடு இல்லாத வாகனங்கள் மற்றும் டேங்கர் பொருத்தாத வாகனங்களில் நீண்டதூரம் மண்ணெண்ணெய் கொண்டுச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, ரேஷன் கடைக்காரர்கள் நேரில் சென்று மண்ணெண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவை ரத்து செய்து, ஒப்பந்த வாகனங்களில் மண்ணெண்ணெய் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிமைப் பொருள் விநியோக அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

x