வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்.16) சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னையில் மட்டும் சாந்தோம் லீத்கேஸ்டில் தெரு, சூளைமேடு சிவானந்தா சாலை, அண்ணாநகர் சாந்தி காலனி, கொளத்தூர் செண்பகம் நகர் ஆகிய 4 பகுதிகளில் வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகின்றது.
இந்நிலையில், சூளைமேட்டில் உள்ள வீரமணியின் உறவினர் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், அதிகாரிகளால் சோதனை நடத்த முடியவில்லை. அதிகாரிகள் தொடர் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த வீட்டுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி எழும்பூர் - நுங்கம்பாக்கம் தாசில்தாரின் அனுமதி பெற்று , சூளைமேடு காவல் ஆய்வாளர் வெற்றிச் செல்வன் மற்றும் காவல் துறை உதவியுடன் சீல் வைத்து அதற்கான நோட்டீஸை வீட்டின் கதவில் ஒட்டினர்.
வீட்டின் உரிமையாளர் எப்போது வருகிறாரோ அப்போது சோதனை நடைபெறும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கொளத்தூர், அண்ணாநகரில் உள்ள வீடுகளிலும் யாரும் இல்லாததால் அவற்றையும் சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.