சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்குக் கரோனா


கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், தொற்று சற்று குறைந்த நிலையில், தற்போது படிப்படியாக இயங்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், மாணவர்களிடம் கரோனா தொற்று பரவுவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. கல்லூரிகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தச் சூழலில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவந்த 510 மாணவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கடந்த 2 முதல் 9-ம் தேதிவரை 13 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தொற்றுக்குள்ளான மாணவர்கள் 13 பேரும் வேப்பேரியில் உள்ள சித்தா கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

x