மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு ஆதரவு கேட்டு விவசாய சங்கப் பிரதிநிதிகள், மக்கள் மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துப் பேசி கடிதம் கொடுத்தார்கள்.
இது தொடர்பாக சென்னையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்த அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு நிர்வாகிகள், ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ அறை கூவலை ஏற்று இந்திய அளவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், தமிழகத்தின் எங்காவது ஓரிடத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தலைமை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ-வையும் சந்தித்த போராட்டக் குழுவினர், அவரிடம் முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தனர்.
இந்தச் சந்திப்புகளின்போது, விவசாயிகள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) பொதுச் செயலாளர் துரை மாணிக்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம் தலைவர் கி. வே.பொன்னையன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வீ.இளங்கீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.