“மோடியின் கூட்டணி ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்” - ப.சிதம்பரம் கருத்து


சென்னை: “முதல்வராகவும், பிரதமராகவும் தனி நபராக ஆட்சி செய்தவர், கூட்டணி ஆட்சியில் நுழைகிறார். இந்த ஆட்சி நிலைக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்துள்ளனர். இண்டியா கூட்டணியில் தமிழ்நாடு மட்டும்தான் அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. அதனால் இரு மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு 372 இடங்கள், கூட்டணி கட்சிகளும் சேர்த்து 400 இடங்களை இலக்காக வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டது. இறுதியில் பாஜக வெறும் 240 இடங்களும், கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 292 இடங்களையும் பெற்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னிலை 300-ஐ தாண்டிவிட்டது. 350 தாண்டும் என மோடி பேசினார். அவை எல்லாம் பொய் பிரச்சாரமாகிவிட்டது. இதைவிட பொய்யான பிரச்சாரம் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு. சொல்லி வைத்தார் போன்று எல்லோரும் 350 இடங்களில் வெற்றி பெறும் என ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டன. ஏனென்றால் அது ஒருவரால் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப்பட்டது.

மக்களை முட்டாளாக்க மோடி முயற்சித்தார். அதையும் மீறி இந்த நாட்டு மக்கள் மோடிக்கு அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். மோடி நாளை பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அவர் நேருவுடன் தன்னை ஒப்பிடுகிறார். நேருவுடன் அவரை ஒப்பிடவே முடியாது. அவரது இந்த கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை.

வி வி பாட் இயந்திரத்தில் அச்சாகி வெளியில் வரும் சின்னத்தை வாக்காளரே ஒரு பெட்டியில் போட வேண்டும் என்ற ஒரு சிறிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்று தான் தெரிவித்திருந்தோம். இயந்திரத்தைப் பற்றி நாங்கள் குறை கூறியதில்லை. இப்போதுள்ள முறையை மெருகேற்றி, செம்மைப் படுத்தி சீர்திருத்த வேண்டும். இந்த தேர்தலில் தார்மீக வெற்றி காங்கிரசுக்கு தான். தார்மீக தோல்வி நரேந்திர மோடிக்கு.குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள், நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் என மோடிக்கு ஒரு மனித ஆட்சியை நடத்தி தான் பழக்கம். இப்போது கூட்டணி அரசாக அமைக்க வேண்டிய கட்டாயம்.

அது நிலையான ஆட்சியாக இருக்குமா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும். கூட்டணி அரசு அமைப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அனுபவம் காங்கிரஸூக்கு இருக்கிறது. மோடிக்கு அந்த அனுபவம் தொடங்குகிறது. எப்படி சமாளிகிறார் என்பதை பார்ப்போம். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப பங்கு சந்தை உயர்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இந்திய பொருளாதாரம் ஓரளவு தான் உயர்கிறது ஆனால் பங்குச்சந்தை பெருமளவு உயர்கிறது என்றால் இது பங்குச் சந்தையின் வளர்ச்சி அல்ல பங்குச் சந்தையின் வீழ்ச்சி. நிப்டி 100 கம்பெனிகளின் பங்கு, சென்செக்ஸ் 50 கம்பெனிகளின் பங்கு.

இதை வைத்து இந்திய பொருளாதாரத்தை மதிப்பிட முடியுமா. மோடி, அரசியல் சாசனத்தை வணங்குவதை நான் வரவேற்கிறேன். அதை வணங்கி விட்டு அதை குளைக்காமல், அழிக்க விடாமல் இந்திய மக்களை பாதுகாக்க தான் இண்டியா கூட்டணிக்கு 242 இடங்களை மக்கள் தந்துள்ளனர். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக மிகப்பெரிய உள் நாட்டுக் கலவரம் நடந்திருக்கிறது. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் உள்நாட்டு அகதிகளாக அகதி முகாம்களின் தங்கி உள்ளனர். நாகரிக நாட்டில் இது மிகப்பெரிய களங்கம். இதற்கு மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

எல்லா மாநிலங்களுக்கும் பலமுறை சென்ற பிரதமர், மணிப்பூருக்கு ஒரு முறையும் செல்லவில்லை. அங்கு ஒருமோசமான அரசு நடைபெறுகிறது அந்த அரிசின் அமைச்சர்கள் எல்லாம் வீட்டைத் தாண்டி 2 கிமீ தூரம் கூட செல்ல முடியாது. ஆனால் அங்கு 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் இண்டியா கூட்டணி வெற்றிக்கு பலம் சேர்த்துள்ளது.

ஓய்ந்திருந்த, ஒதுங்கி இருந்த, வயது முதிர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் நடைபயணம் மூலம் களத்துக்கு கொண்டுவந்தார்” என்று அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.

x