மாணவி அனிதாவில் தொடங்கி மாணவி சவுந்தர்யா வரை, நீட் தேர்வு பாதிப்பால் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட 17 மாணவர்களை மவுன சாட்சியாகத் தமிழகம் பார்த்தாகிவிட்டது. இத்தனைக்கும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட சட்ட மசோதாவை, சட்டப்பேரவையில் தமிழக அரசு செப்டம்பர் 13 அன்று நிறைவேற்றியது. ஆனாலும் அன்றைய தினமும் நீட் தேர்வு தற்கொலை சம்பவத்தை எதிர்கொண்டிருக்கிறோம்.
பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவி கனிமொழி, நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் வருந்தியுள்ளார். மகளை தந்தை தேற்றியபோதும் தனிமையில் இருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முந்தைய தினம் சேலம் மாணவர் தனுஷ் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தார். தான் நன்றாகத் தயார் செய்திருப்பதாகவும், இம்முறை நிச்சயமாக நீட் தேர்வை வென்றுவிடுவதாகவும் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். லேசாக பயம் இருப்பதாகவே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு மன உளைச்சல் தாளாமல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமநிலை அற்ற சமூக அமைப்பில் ஒரே மாதிரியான போட்டித் தேர்வு என்பது நியாயமற்றது. அதை நீக்குவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பாக உள்ளது நம்பிக்கை அளிக்கிறது. அதேநேரம் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகளை அரசியல் சிக்கலாக மட்டும் அணுகுவது, பிரச்சினையின் தீவிரத்தை உணராத செயல் என்று எச்சரிக்கின்றனர் சமூக மனநல ஆலோசகர்கள். இதன் பொருள், ‘மருத்துவ படிப்பைத் தவிர எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன’, ‘நுழைவுத் தேர்வின்றி தகுதியானவர்களைக் கண்டுபிடிக்க முடியாது’ போன்ற சமூகப் பொறுப்பற்ற வாதங்களை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பரோபகார தற்கொலைகள் போதும்!
சமூகப் பிரச்சினைகளுக்குத் தனிமனிதர்கள் தற்கொலையில் ஈடுபடுவதைப் புகழ்பாடும் பண்பாடு தமிழகத்தில் உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழப் போராட்டம், நீட் பிரச்சினைவரை அது நீள்கிறது.
இந்தி எதிர்ப்பும், நீட் ரத்தும் சமூக பிரச்சினைகளாக விவாதிக்கப்படாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகப்படுவது மிகவும் தவறான போக்கு...
“அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் தீக்குளிப்பதையும் சமூகப் போராட்ட உத்தியாகத் தற்கொலை செய்து கொள்வதையும் தியாகமென்று தூபம்போடுவது தமிழக பண்பாட்டில் ஊறியுள்ளது. தங்களது கொள்கையை நிலைநாட்டவோ, சமூக மாண்பைக் காக்கவோ, பிறர் நன்மை கருதியோ தற்கொலை செய்து கொள்வது ’பரோபகார தற்கொலை’ என்றழைக்கப்படுகிறது. இத்தகைய போக்கு தமிழகச் சூழலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பும், நீட் ரத்தும் சமூக பிரச்சினைகளாக விவாதிக்கப்படாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகப்படுவது மிகவும் தவறான போக்கு. உளவியல் ஆலோசகர் என்கிற முறையில் இந்தப் போக்கு அது தொடர்பானவர்களை ஒருவிதமான மனப்பிறழ்வுக்குள் இட்டுச் செல்வதைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. இதில் அனிதா போன்ற குழந்தைகள் பகடைக்காய் ஆக்கப்பட்டார்கள் என்பதுதான் வேதனை” என்றார் உளவியல் ஆலோசகரும் மனிதவள நிபுணருமான டாக்டர் கார்த்திகேயன்.
மனநலத்துக்கும் சாதிய படிநிலைக்கும், வர்க்க முரண்பாடுகளுக்கும், பாலின பாகுபாட்டுக்கும் இடையிலான தொடர்பு இன்றுவரை இந்தியாவில் உணரப்படவில்லை...
முறைப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை!
‘இனியேனும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, கல்வி நிலையங்கள் தோறும் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றார் முனைவர் சிவா மதியழகன். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்வாய்ந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமூகப்பணித் துறையில் சமூக மனநலம் குறித்து முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார்.
”இந்தியச் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் முறைப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை வேரூன்றியுள்ளது. அதைப் புரிந்துகொள்ள நீட் தேர்வு பயம் யாருக்கு வருகிறது என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். சமூகப் பொருளாதார அடுக்கில் விளிம்புக்குத் தள்ளப்பட்ட குழந்தைகள் கல்வி மூலமாக தங்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அப்போது நீட் போன்ற தடைக்கற்கள் தங்களது கனவைச் சிதைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். முட்டி மோதி மேலெழ முயலும்போது மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவது அவர்களது மனநிலையைப் பாதிக்கிறது. ’எங்களுடைய சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு இது கிடையாது’ என்று கைவிடப்பட்டவர்களாகத் துவண்டு போகிறார்கள்.
போதாததற்கு சகமாணவர்களுக்கு இடையிலான போட்டி, குடும்ப அழுத்தம் அத்தனையும் சேர்ந்து தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. இப்படி இருக்கும்போது மனநலத்துக்கும் சாதிய படிநிலைக்கும், வர்க்க முரண்பாடுகளுக்கும், பாலின பாகுபாட்டுக்கும் இடையிலான தொடர்பு இன்றுவரை இந்தியாவில் உணரப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார் சிவா மதியழகன்.
’நான் ஏன் குறிவைத்துத் தாக்கப்படுகிறேன்?’
ஐநா சபை பிரதிநிதியான இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆசோனை வழங்கும் ‘சேஃப் லேப்’ (safe lab) துறையின் இணை இயக்குநராகவும் கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் நிற வெறி நீங்கிய நற்சமூகத்தை உருவாக்கும் குறிக்கோள், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரசுக்கும் உள்ளதை விளக்கினார்.
”அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட், அமெரிக்க வெள்ளை போலீசாரால் கடந்தாண்டு கொல்லப்பட்டதைக் கண்டு அமெரிக்க மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அதன் பிறகு அமெரிக்க அரசு எடுத்த முடிவு கவனத்துக்குரியது. காவல் துறை, ராணுவத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் ஒரு பங்கை கல்வித் துறையில் மனித உரிமையைப் போதிக்க செலவழிக்க முடிவெடுத்தது அமெரிக்க அரசு. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிலரங்கம் நடத்தினேன். அதில் கறுப்பின, ஆசிய, பழங்குடியின சமூகக் குழந்தைகள் பலர் கலந்து கொண்டார்கள். ’நான் ஏன் குறிவைத்துத் தாக்கப்படுகிறேன்?’ என்ற தலைப்பில் ஓவியமும் கவிதையும் சிறுவர், சிறுமிகள் வடித்தார்கள். இப்படி 14 வயதிலேயே அவர்களுக்கு தங்களுடைய வரலாற்றுச் சிக்கல் புரியும்படியான சமூக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சக மாணவர்களும் மனிதநேயத்துடன் அவர்களுடன் பழக முறையாகக் கற்பிக்கப்படுகிறது.
அதே பயிலரங்கத்தை புதுச்சேரியில் அண்மையில் நடத்தியபோது, ஒரு சிறுமி தன்னுடைய நெருங்கிய தோழி திடீரென பழக மறுத்ததாக வருத்தப்பட்டாள். காரணத்தை விசாரித்தபோது, “ஸ்காலர்ஷிப் வாங்குற பிள்ளைங்ககிட்ட பேசகூடாதுனு அவளுடைய அம்மா சொன்னாங்களாம்” என்றாள். பட்டியலின மாணவருக்கான உதவித்தொகையை இச்சிறுமி பெறும் தகவலை வைத்து, இவரது சாதியைத் தோழியின் குடும்பத்தினர் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதையடுத்து அவர்களது நட்பை முறித்து விட்டார்கள். இப்படித்தான், இந்தியக் குடும்பங்கள் இன்றுவரை சாதியத்தை அடுத்த தலைமுறையினர் மனத்தில் விஷம்போல் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறுமிகளுக்கோ இதுகுறித்த புரிதல் இல்லை. ஏனென்றால் மனித உரிமை கல்வியோ, சமூகநீதி கல்வித் திட்டமோ இந்தியச் சமூகத்தில் இதுவரை வடிவமைக்கப்படவில்லை” என்றார்.
தற்போது தமிழக அரசு மாணவர்களுக்கு இணக்கமாகச் செயல்பட விரும்பினாலும், அதைச் செயல்படுத்த பல்முனை வளர்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. நீட் ரத்து என்பது அதில் ஒரு படி மட்டுமே. சமூக, பொருளாதார, பாலின பேதங்கள் குறித்த புரிதலுடன் கூடிய ஆற்றுப்படுத்துனர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரிகள் தோறும் நியமிக்கப்பட வேண்டும். வெறும் ஆற்றுப்படுத்துனராக அல்லாமல், அவர்கள் சமூக மனநல ஆலோசகர்களாகவும் கல்வி வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும். 100 குழந்தைகளுக்கு 1 ஆற்றுப்படுத்துனர் என்ற விகிதாச்சாரத்தில் நியமனம் நடைபெற வேண்டும். இவை அனைத்துக்குமான நிதி ஒதுக்கீடு முறையாகச் செய்யப்பட வேண்டும்.
ஒரு ஜார்ஜ் பிளாய்டுக்காக ஒட்டுமொத்த அமெரிக்காவும் தாங்கள் கடந்துவந்த பாதையை மறுபரிசீலனை செய்யும்போது, பல அனிதாக்களைப் பலி கொடுத்துவிட்டுத் தவிக்கும் தமிழகம், மாற்று வழிகளை சிந்தித்துச் செயல்படுத்த வேண்டாமா?