சென்னை: புதுக்கோட்டையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு, அரசு மருத்துவர்கள் ரூ.7.25 லட்சம் நிதியை வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியின் மகள் மருத்துவர் ஆர்.அஞ்சுதா. முதுநிலை மருத்துவப் படிப்பான எம்எஸ் (மகப்பேறு மருத்துவம்) படித்து முடித்த இவர், கட்டாய பணிக்கான உத்திரவாத ஒப்பந்தத்தின்படி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த மாதம் 30-ம் தேதி பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்தார். தொடர்ந்து, இவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
அரசு சாரா மருத்துவராக இருந்த அஞ்சுதாவின் குடும்பத்துக்கு, அரசு மருத்துவர்களின் விருப்பப் பங்களிப்பு நிதியின் மூலம் வழங்கப்படும் ரூ.1 கோடி சேமநல நிதி கிடைக்காது என்பதால், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்களில் விவரங்களை பதிவிட்டும் அரசு மருத்துவர்களிடம் நிதி திரட்டினர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் 554 அரசு மருத்துவர்களிடம் இருந்து ரூ.7.25 லட்சம் நிதியை திரட்டினர். நேற்று சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் எம்.அகிலன் மற்றும் நிர்வாகிகள் கறம்பக்குடிக்குச் சென்று மறைந்த மருத்துவர் அஞ்சுதா குடும்பத்தினரிடம் அந்த நிதியை வழங்கினர். பின்னர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் நடந்த அஞ்சுதாவின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.