'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் புகழ்பெற்று, தமிழ் சினிமாவின் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், ராஜாக்கூர் கிராமம். இவரது சகோதரர் இல்லத் திருமண விழா, கடந்த 9-ம் தேதி மதுரை சிந்தாமணியில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடந்தது. திரைப் பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்த விழாவில், மணமகன் அறையில் இருந்து 10 பவுன் நகைகள் மாயமாகின. இருப்பினும் நல்ல நிகழ்வு தடைபடக்கூடாது என்பதற்காக, சத்தமில்லாமல் திருமணத்தை நடத்தி முடித்தனர் திருமண வீட்டார்.
கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, இதுகுறித்து நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருமண நிகழ்வுகளைப் பதிவுசெய்த வீடியோக்களின் எடிட் செய்யப்படாத வடிவம், ட்ரோன் கேமிராக்கள் மூலம் பருந்துப் பார்வையில் எடுக்கப்பட்ட காணொலிகள், மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காணொலிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போலீஸார், திருமண நிகழ்ச்சியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த நபரின் உருவத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரமக்குடிக்கு விரைந்த தனிப்படை போலீஸார், விக்னேஷை கொத்தாகப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவரே திருமண விழாவில் 10 பவுன் நகைகளை திருடியவர் என்பது உறுதியானது. அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.
மதுரை வட்டாரத்தில் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், தொழில் அதிபர்கள் என்று யார் வீட்டு நிகழ்ச்சி நடந்தாலும் விக்னேஷ் விஜயம் செய்யக் கிளம்பிப் போய்விடுவாராம். கல்யாண வீட்டுக்காரர் போலவே டிப்டாப்பாக உடையணிந்து போய், முதல் பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டுவிட்டு மணமகன் அறைக்குள் போய் நகையைத் திருடுவதே இவரது வழக்கம். மணமகள் அறைக்குள் வெளி ஆண்கள் போக முடியாது என்பதால், மணமகன் அறையையே இவர் தேர்ந்தெடுப்பாராம். 30 வயதே ஆகும் விக்னேஷ் மீது, 15-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள்.
"இந்த அனுபவத்தைப் பயன்படுத்தி அடுத்த படத்தில் இந்தத் திருடன் கதாபாத்திரத்தில், நடிகர் சூரியே நடித்தால் சூப்பரா இருக்கும்ல..." என்று வேடிக்கையாகப் பேசிக்கொள்கிறார்கள் மதுரை மக்கள்.