தன் மீதான கந்துவட்டி புகாரை மறுத்த பாஜக நடிகை ஜெயலட்சுமி


ஜெயலட்சுமி

தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல், கந்துவட்டி வசூலிப்பதாக தன் மீது பொய் புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபல சின்னத் திரை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மகளிர் சுயவுதவி குழு பெண்களுக்கு வங்கியில் கடன் வாங்கித் தருவதாகப் பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக நேற்று கீதா என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்தது தன் மீது பொய் புகார் அளித்ததாக கீதா மீது ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு வேலையில்லாமல் தவிப்பதாகக் கூறி கீதா என்பவர் என்னுடைய வீட்டிற்கு வந்து அழுதார். இதனால் என்னால் முடிந்த தொகையை அவருக்குக் கொடுத்தேன். அவர் அந்த பணத்தை 5 மாதங்களுக்குள் திருப்பி தருவதாகக் கூறி கையெழுத்திட்ட காசோலையை என்னிடம் கொடுத்துச் சென்றார்.

இதேபோல் கீதா இன்னும் பல பெண்களை அழைத்து வந்து, அவர்கள் பாஜகவில் சேர விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும், அவர்களது குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தப் பணமில்லை என கூறியதால் இரக்கப்பட்டு அவர்களுக்கும் பணம் கொடுத்தேன்.

இப்படி பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுமார் 18 லட்ச ரூபாய் வரை கடன் கொடுத்தேன். அதையெல்லாம் திருப்பிக் கேட்டதற்கு பணத்தைத் தர மறுத்த கீதா, என் மீது கந்துவட்டி புகார் கொடுத்தார் .

என் மீது புகார் கொடுத்திருக்கும் கீதா பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். என்னையும் நம்பவைத்து ஏமாற்றி உள்ளார். கீதா மற்றும் அவரது குழுவினர் வாங்கிய கடனை திருப்பித் தராததால், கடந்த மார்ச் மாதமே திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். கரோனா காரணமாக, எனது புகார் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கீதா, இப்போது என் மீதே பொய் புகார் அளித்துள்ளார். எனவே, என்னை மோசம் செய்த கீதா மீது நான் கொடுத்திருக்கும் புகார் தொடர்பாக காவல் துறையினர் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலட்சுமி தெரிவித்தார்.

x