கடனில் தத்தளிக்கும் கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்கள்!


திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு பிரச்சினை ஏழு ஆண்டுகளாக பேசிமுடிக்கப்படாமல் இழுத்தடிக்கப் படுகிறது. இதனால் பல குடும்பங்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி அவதிப்படுவதாக விசும்பல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

திருப்பூர், கோவை மாவட்ட கிராமங்களில் தட, தடவென சலசலத்து கொண்டிருக்கும் தறி சத்தம் இல்லாத கிராமங்கள் மிகவும் குறைவு. இங்கெல்லாம் விசைத்தறியை நம்பி, லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஒப்பந்தக் கூலி அடிப்படையில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம், விசைத்தறியாளர்கள் துணி நெசவு செய்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக நீடிக்கும் தங்களின் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் துணி, சலவை மற்றும் சாயம் ஏற்றி பாவாடை, சுடிதார், திரைச்சீலை, மெத்தை, சோபா விரிப்பு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெசவுத் துணியானது அகமதாபாத், ஜெய்ப்பூர், டெல்லி, சூரத் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவற்றை, சலவை, பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரி என மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து 35 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, இரண்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூலி ஒப்பந்தப்படி, இன்று வரை விசைத்தறியாளர் களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கூலி அடிப்படையில் தொழில் நடப்பதால், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல தறிகள் இயங்குவது நின்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உபகரணங்கள் விலை உயர்வு என தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள்.

இதனிடையே கடந்த 7 ஆண்டுகளாக இரு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கூலி உயர்வு சம்பந்தமாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் இன்று வரை முடிவு எட்டப்படவில்லை. இதனால் தாங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக விசைத்தறியாளர்கள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையைச் சேர்ந்த விசைத்தறியாளர் பூபதி,

பூபதி

“தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளில் இருமுறை கூலி உயர்த்தி உள்ளோம். அதேபோல் கட்டிடத்தின் வாடகையும் 100 மடங்கு உயர்ந்துள்ளது. வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் தொடர்ந்து நஷ்டத்தில் விசைத்தறியை நடத்தி வருகிறோம். நடத்தமுடியாத பலர் தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு விசைத்தறியாளர்களின் கூலி பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

கோவை - திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பல்லடம் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் நம்மிடம் பேசுகையில்,

அப்புக்குட்டி

”கடந்த 2011-ம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தையின் படி, சோமனூர் பகுதிக்கு 41 சதவீதமும், பல்லடம் பகுதி 31 சதவீதமும் அமலானது. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு பல்லடம் பகுதிக்கு 27 சதவீதமும், சோமனூர் பகுதிக்கு 30 சதவீதமும் அமலானது. அதுவும் 6 மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின்னர் வழங்கவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனை செலுத்தமுடியவில்லை.

ஒரு சில ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒரு சில ஜவுளி ரகங்களுக்கு ஒப்பந்தக்கூலியை வழங்கினார்கள். ஆனால், பெரும்பான்மை உற்பத்தி ரகத்துக்கு, கூலி உயர்வு கிடைக்கவில்லை. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும், பெரும்பான்மை ரகத்துக்கான கூலியை உடனே ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். இதனை இரு மாவட்ட விசைத்தறியாளர்களின் பிரச்சினையாக கருதாமல், லட்சக்கணக்கான விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமாக கருதி தமிழக அரசு கூலி உயர்வை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x