மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமான 'தலைவி' சமீபத்தில் வெளியானது. பட அறிவிப்பு வெளியான காலத்தில் இருந்தே எதிர்ப்புகளையும், வழக்குகளையும் சந்தித்து வரும் தலைவி படத்துக்கு வெளியான பிறகும் எதிர்ப்பு வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராமசுப்பிரமணியன், தமிழக சட்டமன்றத்தில் பெண் வன்கொடுமை நடந்ததாக 'தலைவி' படம் சித்தரித்திருப்பது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, சட்டமன்றத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ’தலைவி’ படத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் செல்வி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்களால் தாக்கப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது. முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அதை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், உண்மையில் சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதா தாக்கப்பட்டதாக, தமிழக சட்டமன்றத்தில் சட்டபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகும். சட்டமன்ற செயலகத்தால் சட்டப்படி வெளியிடப்படாத நிகழ்வுகளை வெளியிடுவது சட்டமன்றத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாகக் கருதப்பட்டு, அதன் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படத்தக்கதாகும்.
படத்தில் ஒரு பெண் உறுப்பினர் சட்டமன்றத்துக்குள் தாக்கப்பட்டிருப்பதாகக் காட்டியிருப்பது, இந்திய அளவில் மாண்புமிகு தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் கொச்சைப்படுத்துவதாகவும், தமிழர்களின் கலாச்சாரத்தின் பெருமையைக் குழைப்பதாகவும் உள்ளது. எனவே, மேற்படி காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கும் வரையில், படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ராமசுப்பிமணியன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.