பொன்வண்ணனை போனில் அழைத்து பாராட்டிய முதல்வர்


பொன்வண்ணன்

தமிழ் திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து அசத்துபவர் நடிகர் பொன்வண்ணன். இடதுசாரி சிந்தனையாளரான இவர் சிறந்த ஓவியரும்கூட. நடிகர் பொன்வண்ணன் அவ்வப்போதைய நிகழ்வுகளை, சமூகத்தில் பார்ப்பவற்றை ஓவியமாக வரைந்து தன் முகநூல் பக்கத்தில் பகிர்வார். அந்தவரிசையில் அவர் இப்போது வரைந்த ஓவியம் ஒன்றைப் பார்த்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினே போன் செய்து பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை சுட்டிக்காட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கண்களின் படத்தை வரைந்து அதன் கீழே தமிழ்நாடு என எழுதியிருந்தார் பொன்வண்ணன். கூடவே அந்த ஓவியத்திலேயே, ‘ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பு... விவாதங்கள்... மக்கள்நல அறிவிப்புகள்... என நம்பிக்கையுடன் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வாழ்த்துகள்’ என எழுதியிருந்தார். மு.க.ஸ்டாலினின் பார்வையில் தமிழகம் மிளிர்வதாக அந்த ஓவியத்தின் அர்த்தம் சொல்கிறது. இந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினே, நடிகர் பொன்வண்ணனை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

பொன்வண்ணன் தீட்டிய ஓவியம்

இதுகுறித்து நடிகர் பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில், ‘தமிழகத்தின் குடிமகனாக கடந்த ஒருமாத சட்டமன்ற விவாதங்களை, மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து கவனித்து வந்தேன். என் மனதுக்கு நெருக்கமான நம்பிக்கைகளுடன் தமிழக முதல்வரின் கண்களை வரைந்து வாழ்த்துகளுடன் பதிவிட்டேன். நான் எதிர்பாராதவிதமாக இரவு 10.30 மணிக்கு முதல்வர் இல்லத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. முதல்வர் உங்களிடம் பேசவேண்டும் என்கிறார் என்றார்கள். தொடர்பில் வந்த முதல்வர் எனது ஓவியத்தைப் பாராட்டியதோடு நம்பிக்கை கொண்ட வரிகளுக்கு நன்றியும் தெரிவித்தது மகிழ்வின் உச்சம்! சிலநிமிடங்கள் தொடர்ந்த உரையாடலில் திரைத்துறை சார்ந்தும், மற்றும் பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புகளையும் முதல்வரிடம் பகிர்வதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்ததில் மன திருப்தி’ என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

x