சென்னை, பாடி, தெற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. கணவரை இழந்த இவர், தனது பகுதியில் உள்ள பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கீதா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நடிகை ஜெயலட்சுமி, அவரது மகள் அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ், அலெக்ஸாண்டர் ஆகியோர் தங்கள் சுய உதவிக் குழுவில் உள்ள 9 பேருக்கும் கந்துவட்டிக் கொடுமை அளித்து மிரட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கீதா, “தேர்தல் நேரத்தில் எங்களுக்கு அறிமுகமான ஜெயலட்சுமி, எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வங்கி மூலம் 10 பைசா வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 7 பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய், 2 பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் என 9 பெண்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்றுத் தந்தார். அதற்குத் தங்களிடம் இருந்து கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை, ஸ்டாம்ப் பேப்பர், பச்சைக் காகிதம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார்.
இந்தக் கணக்கு வழக்குகளை ஜெயலட்சுமியின் மகள் அனகா, வழக்கறிஞர் சார்லஸ் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் பார்த்து வந்தனர். எங்களால் 10 பைசா வட்டி செலுத்த முடியாது என்று கூறியபோது, இயன்றவரை சிறுகச் சிறுக கட்டி நீங்கள் வாங்கிய அசலை அடைத்துக் கொள்ளுங்கள் என நடிகை ஜெயலட்சுமி கூறியதால், அதை நம்பி மாதாமாதம் நாங்கள் பெற்ற கடனுக்கு உண்டான தொகையை வங்கியில் செலுத்தி முடித்துவிட்டோம். இந்நிலையில், தற்போது நடிகை ஜெயலட்சுமி மற்றும் சார்லஸ் ஆகியோர் ‘இதுவரை நீங்கள் செலுத்திய பணம் அனைத்தும் வட்டிக்குத்தான் சென்றுள்ளது, அசல் இன்னும் அப்படியே உள்ளது’ எனக் கூறி, தொடர்ந்து பணம் கேட்டு எங்களை மிரட்டுகின்றனர்” எனக் குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமின்றி நள்ளிரவில் சார்லஸ், அலெக்ஸாண்டர் ஆகிய இருவரும் தங்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்தும், தொலைபேசி மூலம் அழைத்தும் கந்துவட்டி கேட்டு கொடுமை செய்வதாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களைக் கந்துவட்டிக் கொடுமையில் இருந்து மீட்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கீதா கூறினார்.