காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாக உள்ளது. பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது. அதையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாள் உலாவந்தார். இடப் பக்கத்தில் இருந்து வலப் பக்கமாக மூன்று முறை வலம் வந்த பெருமாளை பக்தர்கள் கற்பூரம், ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.