சுற்றுலா நகரான மதுரையில் முக்கிய சாலைகளில் உள்ள ரவுண்டானாக்களில், வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக சுற்றுலா நகராக மதுரை திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோயில் உள்ளிட்ட சுற்றிப்பார்க்க வேண்டிய ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களைப் பார்க்க வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு 2 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பெரிய தொழிற்பேட்டைகள் இல்லாததால், சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டே மதுரையின் வளர்ச்சி அமைந்துள்ளது. அதனால், சாலை கட்டமைப்பு வசதிகள் மதுரைக்கு முக்கியமானவை.
ஆனால், தமிழகத்திலே மிக மோசமான சாலை கட்டமைப்புகளை கொண்டுள்ள நகராக மதுரை இப்போது உள்ளது. சென்னைக்கு அடுத்த பெருநகரமாக மதுரை கருதப்பட்டாலும் அதன் வளர்ச்சி கோவை, திருச்சி, சேலம் மாநகரங்களை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டே மதுரை நகரின் அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள் குறுகலாக உள்ளன. அதிலும் பாதி சாலைகளை வணிக நிறுவனங்கள் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துகின்றன. அதனால், இந்தச் சாலைகளில் வாகனங்களில் சென்றுவர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை நகரில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் ஒரு வழிச்சாலையாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எளிதாகச் சென்றுவர முடியவில்லை. அதனால், ஒரு முறை மீனாட்சியம்மன் கோயில் வரும் பக்தர்கள், மீண்டும் மதுரைக்கு வர தயங்குகின்றனர்.
மதுரை மாநகருக்குள் தேசிய, மாநில மற்றும் மாநகராட்சி சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் பழங்காநத்தம், வசந்த் நகர், கோரிப்பாளையம், கே.கே.நகர், காளவாசல், தெப்பக்குளம், பாத்திமா கல்லூரி, விரகனூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 13 இடங்களில் ரவுண்டானாக்கள் உள்ளன. இந்த ரவுண்டானாக்களில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக தினமும் பல லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
தமிழகத்தின் பிற சுற்றுலா தலங்களில், சுற்றுலா தலங்களை அடையாளப்படுத்தியும், செல்ல வேண்டிய அதன் தொலைவுகளை கி.மீ., அளவில் குறிப்பிட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரையில் உள்ள ரவுண்டானாக்களில் எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை.
அதனால், வாகனங்களில் வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடியாமல் திசை மாறி சென்று தவிக்கும் அவலம் ஏற்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், மதுரையின் சுற்றுலா தலங்களை எளிதாகக் கண்டறிந்து செல்வதற்கு ரவுண்டானாக்களில் எந்தச் சாலை எங்கு செல்கிறது என்ற திசை காட்டி அறிவிப்பு பலகை அவசியமானது.
மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் உடனடியாக ரவுண்டானா சந்திப்பு பகுதிகள் மட்டுமில்லாது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளிலும் திசை காட்டும் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள், வெளியூர் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.