நீட் விவகாரத்தில் பொதுமக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார் எச்.ராஜா


‘என்ன செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பொதுமக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும்விதமாக எச்.ராஜா பேசுவது கண்டிக்கத்தக்கது’ என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க இன்று திருப்பூர் வந்திருந்த கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள். இதுபோல் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தடையின்றி தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும். மேட்டூரில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அனிதா உள்ளிட்ட பல மாணவ -மாணவிகள் தேர்வு பயத்தின் காரணமாக உயிரை பறிகொடுத்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது. தமிழக அரசு நிறைவேற்றும் சட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்ன செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என எச்.ராஜா கூறுகிறார். இவர் தன்னை மத்திய அரசு போல, பாவித்து பேசுகிறார். ராஜா போன்றவர்கள், தமிழ்நாட்டின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத் துறை சொத்துகளை 6.75 லட்சம் கோடிக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்போவதாக அறிவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் ரூ.6 லட்சத்து 72 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டி ருக்கிறது. ஒட்டுமொத்தமாக பொது நிறுவனங்களை மூடுவதற்கான ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இப்படி குத்தகைக்கு விடுவது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தான் சாதகமாக அமையும்.

அகில இந்திய அளவில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள் வரும் 27-ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்திருக் கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியின் போதே அதிமுக அரசு நீட் தேர்விற்கு விலக்கு வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய பழனிசாமி தவறிவிட்டார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை திருப்பி அனுப்பினால் மீண்டும் ஒருமுறை அதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை மத்திய அரசு நிராகரிக்க முடியாது. அதை அதிமுக செய்யவில்லை. திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும். அடுத்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு திமுக அரசு விலக்கு வாங்கிவிடும் என முழு நம்பிக்கை உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகளை மூட வேண்டும். திருப்பூரில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையை உடனே கட்ட வேண்டும். பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

x