மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சென்னைக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்திலே முதல்முறையாக எலும்பு வங்கி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச் சாவு ஏற்படுவோர், விபத்தில் அடிபட்டு உயிருடன் இருந்தாலும் கை, கால்களை அகற்றும் நிலைக்குத் தள்ளப்படுவோர் உள்ளிட்டவர்களின் எலும்புகளை தானமாகப் பெற்று இந்த எலும்பு வங்கியில் பாதுகாக்கப்படும்.
வாகனப் பெருக்கம் காரணமாக, தற்போது சாலை விபத்துகள் அதிக அளவு ஏற்படுகின்றன. அதில் கை, கால்கள் முறிவு ஏற்படுவோரும், எலும்புப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெருமளவில் வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அதற்கு மாற்று எலும்பைப் பொருத்தவோ அல்லது நிரப்பவோ செய்ய வேண்டும். ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி இல்லாததால் எலும்பு முறிவு, எலும்பு நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் முழுமையாக மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 30 புதிய புற்று நோயாளிகளும், 75 பழைய புற்று நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில், எலும்புப் புற்று நோயாளிகள்தான் அதிகம். இவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் மருத்துவம் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதில், கதிரியக்க சிகிச்சையில் புற்று எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு புற்றுநோய் செல்களை அழித்து நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், எலும்புப் புற்றுநோயைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், நோயாளிகள் இயல்பாக நடக்க, இருக்க முடியாதநிலை ஏற்படும்.
எலும்புப் புற்றுநோய்க்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ‘எலும்பு வங்கி’ அவசியமாகிறது. தமிழகத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனையில் எலும்பு வங்கி உள்ளது. தென் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட எலும்பு வங்கி இல்லை. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘எலும்பு வங்கி’ அமைக்க 2017-ல் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கியது.
மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தில் சிறுநீரகம், எலும்பு மற்றும் பிற உறுப்புகள் தானம் பெறவும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், எலும்பு வங்கியை தொடங்குவதற்கு எந்தச் சிக்கலும் இல்லை. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக எலும்பு வங்கி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இப்போது இங்கு விபத்து காய மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் எலும்பு வங்கி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் எலும்பு எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் ஆர்.அறிவாசன் கூறுகையில், “புற்று நோயால் அதிகமாகப் பாதிக்கப்படும் எலும்புகளை எடுக்கிறோம். அதேபோல் விபத்தில் அடிபட்டு வருவோருக்கும் சிறு, சிறு, கட்டிகள் இருப்போருக்கும் எலும்புகளை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இப்படி அகற்றப்படும் எலும்புகளின் இடத்தை நிரப்ப எலும்புகள் தேவைப்படும். எலும்பு வங்கியில் எலும்புகளை தானமாகப் பெற்று பாதுகாத்து வைத்தால் இதுபோன்ற நேரங்களில் பயன்படுத்த முடியும். அதற்கான பணிகள் தான் இப்போது தொடங்கி இருக்கின்றன.
மூளைச் சாவு ஏற்படுவோர், விபத்தில் அடிபட்டு கைகால்களை இழக்க நேரிடுவோர் ஆகியோரின் எலும்புகளை தானமாக பெற்று இந்த வங்கியில் பாதுகாக்க உள்ளோம். எலும்புகளை அப்படியே தானமாக பெற்று வைக்க முடியாது. அதில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்தால் மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பல வருடங்களுக்குப் பாதுகாக்கலாம். அதற்கான மருத்துவ உபகரணங்கள், 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் போன்ற கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள்தான் தற்போது நடக்கிறது” என்றார்.