தஞ்சாவூர்: தொழிலாளர்கள் நல வாரியத்தில் 74 லட்சம் உறுப்பினர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக அரசு கூறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று சிஐடியுவின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், “மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் எதேச்சதிகார ஆட்சிக்கு கடிவாளமாக மாறி இருக்கிறது. பாஜக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு தண்டனையாகவும் இந்த தீர்ப்பை நாம் பார்க்கலாம்.
கூட்டணி ஆட்சி என்று அவர்கள் அமைத்த பிறகு ஏற்கெனவே தனி பெரும்பான்மையாக இருந்தபோது அவர்கள் எடுத்த அரசியல் சட்ட விரோத நடவடிக்கையை இனி எடுக்க முடியாது. தங்களுடைய கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். மதத்தை வைத்து மோத விடுவது, பல சமூகத்தவர்களை மோத விடுவது, மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றையும் அவர்கள் கைவிட்டு, இனி அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். நாடாளுமன்றத்திலும் மிக வலுவான ஒரு எதிர்க்கட்சி அணியை மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் மத்தியில் ஆளப்போகும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தற்போது தொழிலாளர் பிரச்சினைகள், முறை சாரா தொழிலாளர் பிரச்சினை, விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர், ஓய்வூதியர்கள், அங்கன்வாடி திட்டப் பணியாளர்கள் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை நார் என்பது ஒரு மூலப் பொருளாக உள்ளது. தமிழக அரசு இதற்கான ஒரு தொழிற்சாலையை இங்கு உருவாக்க முடியும். இங்கு தொழிற்சாலை அமைப்பதால் பலருக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும்.
மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களுக்கு என்று தனியாக மணல் குவாரியை ஏற்படுத்த வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ளக்கூடாது என்று முழுமையாக தடை செய்வது சரியானது அல்ல. தொழிலாளர்கள் நல வாரியத்தில் சுமார் 74 லட்சம் உறுப்பினர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக அரசு கூறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் கோரிக்கை மனு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் பலன் கிடைக்கவில்லை. உறுப்பினரா அல்லது இல்லையா எனக்கூட தெரியாமல் பலர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு சுமூகமாக தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அழுத்தம் தருகிற போராட்டங்களை முன்னெடுப்போம்'' என்றார்.