கம்யூனிஸ்ட்கள் என்றாலே ஆளுங்கட்சிக்கு எதிராக ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டே இருப்பார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள் எனும் எண்ணம் நிலைபெற்றுவிட்டது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அமைதி காக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதன் மாநில செயலாளர் இரா.முத்தரசனுடன் ‘காமதேனு’ இதழுக்காகப் பேசினோம்.
பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையிலான கருத்து மோதல் வன்முறையாக மாறத் தொடங்கிவிட்டதே?
திரிபுரா சம்பவத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பங்குகள், சொத்துக்கள் தொடங்கி பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி வரையில் அத்தனையையும் தனியாருக்குத் தாரைவார்க்கத் துணிந்துவிட்டது. அதைத் தடுக்க முயலும் முதன்மை சக்தியான கம்யூனிஸ்ட்கள் மீது அவர்களுக்கு எரிச்சல் வருவது இயல்பானதுதான்.
பாஜகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் இல்லாத இந்தியா, கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா என்று முழங்கிக்கொண்டிருப்பவர்கள் அதனைச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். 2 நாட்களில் கம்யூனிஸ்ட்கள் 40 பேரின் வீட்டைத் தீவைத்து எரித்திருக்கிறார்கள், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைச் சூறையாடியிருக்கிறார்கள். பொதுவுடைமைத் தோழர்களைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இப்படிப் பல வன்முறைகளைத் தாண்டித்தான் கம்யூனிஸ்ட்கள் இன்றும் இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறோம். பாஜகவின் அராஜகம் மட்டுமல்ல, ஆட்சியும் முடிவுக்கு வரப்போவதையே அவர்களது வன்முறை வெறியாட்டம் காட்டுகிறது.
திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?
ஆட்சிக்கு வந்த கையோடு, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு இருமுறை தலா 2000 ரூபாய், 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய உணவுத் தொகுப்பு கொடுத்தது உட்பட தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, சில திட்டங்களை உடனே நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் விரைவில் அவற்றையும் நிறைவேற்றுவோம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.
குறைசொல்கிற பாஜக, நாட்டு மக்களுக்காக ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறதா? ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ள பாஜக அரசு, இப்போது எரிவாயு விலையையும் 925.50 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. கரோனா பரவல் காரணமாக வேலை மற்றும் வருமான இழப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு ரொக்கப்பணம் கொடுத்து உதவ வேண்டிய ஒன்றிய அரசு, இப்படி விலைவாசியை உயர்த்திவருவது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய கம்யூனிஸ்ட்டும் தேர்தல் அறிக்கை வெளியிட்டதே, அதில் எவை எல்லாம் நிறைவேறியிருக்கின்றன?
வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், கோயில்களில் தமிழில் அர்ச்சனை இது நாங்கள் கொடுத்த வாக்குறுதி தான். தேசிய கல்விக்கொள்கை 2020, குடியுரிமைத் திருத்த மசோதா, விவசாயிகள் மசோதா போன்றவற்றைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாமல் தடுப்போம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்குக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் என்பன போன்ற எங்களது வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் ரத்து, உயர் நீதிமன்றத்தில் தமிழ், அனைத்துத் தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் போன்ற கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கருணாநிதி நினைவிடம் கட்ட நிதி, பெரியாருக்கு திக சார்பில் பிரம்மாண்ட சிலை வைக்க அனுமதி, பல தலைவர்களுக்கு மணிமண்டபம் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் இதுபோன்ற நினைவுச் சின்னங்களை எழுப்ப கோரிக்கை வைக்குமா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?
கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது திமுகவுக்கு எப்போதும் மரியாதை உண்டு. நான் அரசியலில் பல தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். நான் அண்ணா என்று கூப்பிட்டது, அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, ஜீவா ஆகியோரைத்தான் என்று எங்களிடமே கலைஞர் பலமுறை சொல்லியிருக்கிறார். ஜீவாவுக்கு மணிமண்டபமும் கட்டிக்கொடுத்தார். நடந்துகொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில்கூட ஜீவா பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று எங்கள் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை வைத்திருக்கிறார். மற்ற தலைவர்களையும் கவுரவிக்க நாங்கள் குரல் கொடுப்போம்.
தொழிலாளர்களின் கட்சியான கம்யூனிஸ்ட்களுக்கு, இப்போது தொழிலாளர்கள் மத்தியிலேயே செல்வாக்கு குறைந்துபோய்விட்டது போலத் தோன்றுகிறதே?
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தொழில்களே அழிந்துகொண்டு வருகின்றன. ஏற்கெனவே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் படிப்படியாக வலுவிழக்கச் செய்துவிட்டார்கள். முதலாளித்துவம் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க இயல்பாகவே தொழிலாளர்களுக்குப் பொதுவுடமை இயக்கம் மீதான பற்றுதலும் ஈர்ப்பும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்துக்குப் புதிய ஆளுநர் வந்திருக்கிறார். உங்கள் கருத்து?
மாநிலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவது, அந்த மாநிலங்களை உளவு பார்ப்பது போன்ற காரணங்களுக்குத்தான் ஆளுநர் பதவியை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்திவருகிறது. ஏற்கெனவே இருந்த ஆளுநர் நிர்வாகங்களில் தலையிட்டுப் பார்த்தார், எதிர்ப்பு காரணமாக பின்வாங்கினார். இப்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்டகாலமாகக் காவல் அதிகாரியாகவும், இந்திய உளவுத் துறையான இன்டெலிஜன்ஸ் பியுரோவிலும் பணியாற்றியவர். உளவு பார்ப்பதென்று முடிவாகிவிட்டது, அதில் கைதேர்ந்தவரையே அனுப்புவோம் என்று ஒன்றிய அரசு இவரைத் தேர்வு செய்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் மட்டுமே உங்கள் கட்சி வென்றுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகச் சொன்னீர்களே, கண்டுபிடித்துவிட்டீர்களா?
2021 சட்டமன்றத் தேர்தலின்போது எந்தக் கட்சிக்கும் ஆதரவான அலையோ, எதிரான அலையோ வீசவில்லை. அடுத்து ஆட்சியில் இருக்கிற இருபெரும் கட்சிகளை எதிர்த்து நாங்கள் மோத வேண்டியது இருந்தது. பண பலம், அதிகார பலம் காரணமாக எங்களது வெற்றி வாய்ப்பு கணிசமாகக் குறைந்தது உண்மைதான். அடுத்தடுத்த தேர்தல்களின் இன்னும் கவனமாகப் பணியாற்றி, வெற்றிபெறுவது என்று எங்கள் கட்சி முடிவெடுத்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கே.டி.கே.தங்கமணி, நல்லகண்ணு, தா.பாண்டியன் வரிசையில் கவர்ச்சிமிக்க, பேச்சாற்றல் மிக்க தலைவர்கள் அடுத்தடுத்து தோன்றாமல் போய்விட்டார்களே. இந்த வெற்றிடத்தைக் கட்சி எப்படி பூர்த்தி செய்யப்போகிறது?
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்குகிற கட்சி. தனி மனிதர்களை மட்டுமே நம்பி நடத்தப்படுகிற கட்சி அல்ல. எனவே, இப்போதும் சரி, எப்போதும் சரி இங்கே வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு தலைவரும் வீரியமிக்க அடுத்த தலைமுறை தொண்டர்களை உருவாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். இது ஒரு தொடர் ஓட்டம். இலக்கை அடையும் வரையில் ஓயாது!