சிவகாசி அருகே விதிமீறல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை


சிவகாசி அருகே மாரனேரி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த அதிகாரிகள்.

சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரியில் விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சிவகாசியை சேர்ந்த முனியராஜ் என்பவர் மாரனேரி டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று ஸ்ரீபதி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி, வட்டாட்சியர் வடிவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விதிமீறி மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும், உற்பத்தி செய்த பட்டாசுகள் தரையில் காய வைத்ததும் தெரியவந்தது.

மேலும் பட்டாசு இருப்பு அறையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தன.