ஊர்ப்பாசம் ஊறுகா அளவுக்காவது வேண்டாமாய்யா..!


எய்ம்ஸ் கட்ட ஒதுக்கப்பட்ட இடம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நீதிக்கட்சி பி.டி.ராஜன், கம்யூனிஸ்ட் கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, மதுரை முத்து, கக்கன், கா.காளிமுத்துன்னு பல ஆளுமைகளை சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்புன பெருமைக்குரிய ஊரு மதுரை. பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் போன்றோரை ஆளாக்கி அனுப்புன பெருமையும் மதுரைக்கே உண்டு. ஆனா இப்ப?

கட்டுரைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடுறேன். இதுவரைக்கும் மதுரையைப் புகழ்ந்து எத்தனையோ கட்டுரை எழுதியிருப்பேன். ஆனா, இப்ப இப்படியொரு கட்டுரை எழுதவேண்டிய சூழல் வந்ததுக்காக ரொம்பவே வருத்தப்படுறேன், வேதனைப்படுறேன். மன்னிச்சுக்கோ.. அம்மா மீனாட்சி.. மன்னிச்சுக்கோ, எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...

1788-ல திண்டுக்கல்லுக்கு அரசனா முடிசூட்டப்பட்ட திப்பு சுல்தான், மதுரையோட சிறப்பு என்னன்னு விசாரிச்சாராம். "அதென்ன அப்புடிக் கேட்டுப்புட்டீக... மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், வைகை ஆறு, ராணி மங்கம்மா அரண்மனை எல்லாம் அங்கிட்டுத்தான் இருக்குது"ன்னு பெருமையாப் பதில் சொன்னாங்களாம் மந்திரிங்க.

20 வருடத்துக்கு முன்னாடி நான் மதுரைக்கு வந்தப்பவும், இதையே தான் சொன்னாய்ங்க. கூடுதலா, சில தியேட்டருங்க பேரைச் சொன்னாங்க... அம்புட்டுத்தேன். இப்பவும் புதுசா வர்ற நண்பர்கள் யாராவது மதுரையோட சிறப்பு பத்திக் கேட்டா, நானும் அதே பழைய மாவுலதான் வடையைச் சுட்டுக்கிட்டு இருக்கியேன்! வேற என்ன புதுசா வந்திருக்குதுன்னு மூளையைப் போட்டுக் கசக்கினா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பேய் பங்களா போல காலியாகக் கிடக்கிற உலகத்தமிழ்ச் சங்க கட்டிடம். அவ்வளவுதான் ஞாபகத்துக்கு வருது.

மதுரை விமான நிலையம்

வேற எதுவுமே உருப்படியா இந்த ஊருக்குன்னு வரலியான்னு நீங்க கேட்பீங்க. வரல... வரல... வரவேயில்லைங்கிறதுதான் உண்மை. இந்த ஊர்க்காரர்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி.. வெட்டியா ஊர்ப்பெருமை பேசுவாங்களே தவிர, ஊர் முன்னேற்றத்துக்குத் துரும்பைக்கூட கிள்ளிப் போட மாட்டாய்ங்க போல. "மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யணும், சர்வதேச விமான நிலையமா தரம் உயர்த்தணும்"னு யாராச்சும் குரல் கொடுத்தா, அதுக்கு ஆதரவா ஒருத்தரும் பேச மாட்டாங்க. ஆனா, அந்த விமான நிலையத்துக்கு என் சாதித் தலைவர் பேரைத்தான் வெக்கணும்னு ஒருத்தர் சொன்னா, ஓராயிரம் பேரு வரிசை கட்டிக்கிட்டு வருவாய்ங்க. அந்த நபர் பேரை வெக்கவே கூடாதுன்னு இன்னொருத்தர் சொன்னா, அவர் பின்னாடியும் ஆயிரம் பேரு வருவாய்ங்க.

“வைகைதான் எங்களோட பெருமை"ன்னு வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வெச்சிக்கிட்டுத் திரிவாய்ங்க. ஆனா, அந்த வைகையில கலக்கிற சாக்கடையைப் பத்தி துளியும் கவலைப்பட மாட்டாய்ங்க. அழகர் ஆத்துல இறங்குற சித்திரை மாசத்துலகூட, ஆத்துக்குள்ள கழிவுநீர் கலக்கிறதையும், திருவிழாவுக்கு வர்ற கூட்டம் கக்கா போறதையும் கண்டுக்க மாட்டாய்ங்க.

திருநெல்வேலி மாவட்டத்துல இருந்து சமீபத்துல தென்காசியைப் பிரிச்சாங்க. மலைப்பகுதி பூராம் தென்காசிக்குப் போயிடும்னு பூராப்பேரும் நினைச்சுக்கிட்டு இருக்க, அவிய்ங்க ரொம்பத் தெளிவா தாமிரபரணி உற்பத்தியாகிற பொதிகை மலையையும் ஆத்தையும் அப்படியே திருநெல்வேலியில தக்க வெச்சுக்கிட்டு, மிச்ச சொச்சத்தைத்தான் தென்காசி மாவட்டத்துக்கு விட்டுக்கொடுத்தாய்ங்க. ஆனா, இங்க பாருங்க... மதுரையைப் பிரிக்கும்போது மூல வைகையையும், வைகை அணையையும் தேனி மாவட்டத்துக்குச் சீர் மாதிரி கொடுத்திட்டாய்ங்க மதுரை அரசியல்வாதிங்க. தம்பிக்காரனுக்குப் பசுவோட தலைப் பகுதியையும், அண்ணன்காரனுக்கு காம்புப் பகுதியையும் பங்கு வெச்ச கதைதான். தம்பி தீவனம் போட்டாத்தான, அண்ணங்காரன் பால் கறக்க முடியும்? இதை வெச்சி நமக்கென்ன புண்ணியம்னு அவன் பட்டினி போட்டா, பாதிக்கப்படுகிறது யாரு? அதுதான் வைகை விவகாரத்துல நடக்குது.

மூல வைகை பூராம் ஆக்கிரமிப்பு. அதைப் பத்தி அந்த மாவட்ட நிர்வாகம் கண்டுக்கிறதில்ல. வழிநெடுக தண்ணித் திருட்டு. அதைப் பத்தியும் அவங்க கவலைப்படுறதில்ல. இந்த 30, 40 வருஷத்துல எந்த மதுரை அரசியல்வாதிங்களாவது அதைப் பத்தி பேசுறாங்களான்னா அதுவும் இல்ல. திடீர்னு வெளிநாட்டு மாப்ள மாதிரி அரசியலுக்கு வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதைப் போட்டு உடைக்க, "அய்யய்யோ விவசாயிகள திருடன்னு சொல்லிட்டாரு”ன்னு அவரைத் துரத்துது ஒரு கூட்டம்.

பெரியார் பேருந்து நிலையம்

சரி, வெளையாட்டு மைதானத்தையாவது விட்டு வெச்சாங்களா? அங்கேயும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டிட்டாங்க. ஆனானப்பட்ட சென்னையிலேயே, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு எழும்பூர்லேயும், மனநலப் பிரிவு கீழ்ப்பாக்கத்துலேயும் இருக்குது. ஆனா, இங்க எல்லாத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வர்றேன்னு சொல்லி, மூச்சுவிடக் கூட இடமில்லாம ராஜாஜி ஆஸ்பத்திரியில நெருக்கி நெருக்கி கட்டிடமா கெட்டி வெச்சிருக்காய்ங்க. அய்யா அதை வெளியே போய் கட்டுங்கய்யான்னு சொல்ல நாதியில்ல. அதை எல்லாம்கூட விடுங்க. எய்ம்ஸ் ஆஸ்பத்திரின்னு சொல்லி, வளர்ச்சியின் நாயகன் ஒருத்தரு 3 வருஷத்துக்கு முன்னாடி அடிக்கல் நாட்டிட்டுப் போனாரு. இன்னும் அதுக்கு அஸ்திவாரம்கூட தோண்டல.

சென்னையில 2, திருச்சி, திருநெல்வேலி, கோவைன்னு எல்லா பெரிய ஊர்கள்லேயும் மாவட்ட அறிவியல் மையம் இருக்குது. மதுரையில அப்படின்னா என்னன்னே யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே, ராஜாஜி பூங்காவுல இருந்த அறிவியல் பூங்காவை அழிச்சிட்டு அங்க கந்த சஷ்டி மண்டபத்தைக் கட்டுனாரு ஒரு எட்டெழுத்து மேயரு. காந்தி மியூசியத்துல இருந்த அறிவியல் பூங்கா என்ன ஆச்சுன்னு காந்திக்கே தெரியல. வெறும் கல்வெட்டுத்தான் இருக்கு. 10 வருஷம் ஒரே தொகுதியில ஜெயிச்சி அமைச்சரா இருந்தவரு, சட்டப்பேரவையில பேசுறாரு, “என் தொகுதியில ஒரு காலேஜ்கூட இல்ல. கட்டித்தாங்க"ன்னு.

“அய்யா சீனியர் அமைச்சரே, நீங்க அப்ப 10 வருஷமா என்னய்யா பண்ணுனீங்க?"ன்னு கேட்க நாதியில்ல. இன்னொருத்தரு தென்தமிழ்நாட்டோட துணை முதல்வர்னு சொல்ற அளவுக்கு செல்வாக்கோட இருந்தாரு. மதுரையைத் துணை தலைநகராக்குவேன்னு சொன்ன அவரு, கடைசியில ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு கோயில் மட்டும் கட்டிட்டுப் போயிட்டாரு. இவராச்சும் பரவால்ல. அவருக்கு முன்னாடி ஒரு முதல் அமைச்சரோட மகன் மத்திய அமைச்சராவே இருந்தாரு. அவர் மதுரையை குற்றத் தலைநகரால்ல மாத்தி வெச்சிருந்தாரு!

ச்சே... பழைய அரசியல்வாதிங்கதான் இப்படி. 25 வருஷமா தேர்தல்ல நின்னு நின்னு தோத்துப்போன ஒரு மனுஷனுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு மதிமுககாரர் ஒருத்தரை எம்எல்ஏ ஆக்குனாங்க மக்கள். அவரு என்னடின்னா டி.எம்.சவுந்திராஜனுக்கு சிலை வைங்க, 'மதுரை காந்தி' என்.எம்.ஆர்.சுப்பராமனுக்கு சிலை வைங்கன்னு சட்டப்பேரவையில பேசுறாரு.

யப்பா.. மதுரை அரசியல்வாதிங்களா, அதிமுக ஆட்சிக்காலத்துல கொங்கு மண்டலம் எப்படி மாறியிருக்குன்னு போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க. திமுக எப்படி ‘சிங்காரச்சென்னை 2.0’ன்னு திட்டம் போட்டுருக்குதுன்னு விசாரிக்கவாவது செய்யுங்க.

அதைப் பார்த்தாவது, ஊர்ப்பாசம் உங்களுக்கு ஊறுகா அளவுக்காவது வருதான்னு பார்க்கலாம்!

x