தேமுதிக உள்ளே... பாமக வெளியே!


"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்பது அரசியல்வாதிகளால், அரசியல்வாதிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் பழமொழி. உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், ஆளுங்கட்சியோடு ஒட்டிக்கொள்வதற்காக இந்தப் பழமொழியை கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறன தமிழக அரசியல் கட்சிகள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கிற கட்சிகள் மகிழும்படியான சில காரியங்களை திட்டமிட்டுச் செய்துகொண்டிருக்கிறது.

தேர்தல் கணக்குகள்

தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக தலைமையிலான அணியே வெற்றிபெறும் என்பது, 1967 முதல் எழுதப்படாத விதியாக இருக்கிறது. இதை மாற்றுவதற்கு நிறைய முயற்சிகள் நடந்தாலும், எதுவும் பலன் கொடுத்ததில்லை. கடந்த 10 ஆண்டு கணக்கை எடுத்துக்கொண்டால், 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, மதிமுக, பாமக, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்றவை அந்தக் கூட்டணியின் தோல்வி காரணமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வேறு அணிக்கு மாறிவிட்டன. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா போன்றவை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தன. அந்தத் தேர்தலில் திமுக அணியே வென்றதால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கிட்டத்தட்ட இதே கூட்டணியே நீடித்தது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவிட்டு, அதிமுகவுடன் முதல் ஆளாகக் கூட்டணி உடன்பாடு செய்துகொண்ட பாமக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் பழைய கூட்டணி அப்படியே தொடர்ந்தது. மதச் சிறுபான்மையினரின் கட்சிகளும் திமுகவை ஆதரித்தன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக கூட்டணி போன்றவையும் களத்தில் இருந்தன. இறுதி வெற்றி திமுக கூட்டணிக்கே கிடைத்தது. அதிமுகவும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 20 இடங்களில் போட்டியிட்ட பாமக வெறும் 5 இடத்தில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

உள்ளாட்சித் தேர்தல்

இப்போது உள்ளாட்சித் தேர்தல். அதுவும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பெரும்பாலும் (9 புதிய மாவட்டங்கள் தவிர) முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலே எஞ்சியிருக்கின்றன. நகர்ப்புறங்களில் கவுன்சிலர் சீட் முதல் நகராட்சித் தலைவர், மேயர் போன்ற பதவிகள் வரை அனைத்துக்கும் கட்சி சார்ந்த ஆட்களே வருவார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் இதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றன.

ஏற்கெனவே மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் குவிக்கும் முனைப்போடு களமிறங்குகிறது திமுக. அரசு ஊழியர்களின் அதிருப்தியை மட்டுப்படுத்தும் விதமாக, அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்பது எழுதப்படாத விதி (எடப்பாடி பழனிசாமி காலம் விதிவிலக்கு). அதன்படி திமுகவே வெற்றிபெறும் என கணிக்கப்படுவதால், திமுக அணிக்குத் தாவும் முனைப்பில் இருக்கும் கட்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது தேமுதிக. இன்னொரு கட்சி ரொம்பவே முயன்றது. திமுகவோ, ‘உங்கள் வன்னியர் வாக்கு வங்கிதான் எங்களுக்குத் தேவை. உங்கள் கட்சியைச் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், வடக்கு மாவட்டத்தில் உள்ள மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை எல்லாம் கேட்பீர்கள். செலவுக்கு வேறு பணம் கேட்பீர்கள். கம்பெனியே நஷ்டத்தில் ஓடுகிறது. கட்டுப்படியாகாது’ என்கிற ரீதியில் பேசி பாமகவை கழற்றிவிட்டுவிட்டது என்கிறார்கள். வேறு வழியில்லாமல், அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துவிட்டார். ஜி.கே.வாசனைக் கேட்கவே வேண்டாம். அவர் அதிமுகவின் நிலைய வித்வான்களில் ஒருவராகிவிட்டார். பாஜக இல்லாத கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்பதே அதிமுக அடிமட்டத் தொண்டனின் கூற்றாக இருக்கிறது. அதை அதிமுக தலைமை நிறைவேற்றுமா என்று தெரியாது. ஆனால், பெருவாரியான இடங்களில் பாஜகவை ஒதுக்கிவிட்டு தேர்தலைச் சந்திக்க அடிமட்ட அதிமுகவினர் தயாராக இருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகளின் நிலையும் அதுதான். உள்ளாட்சித் தேர்தலில் இடம் ஒதுக்க மாட்டார்கள், அப்படியே ஒதுக்கினாலும் அங்கேயும் திமுக ஜெயிப்பது போல ஏதாவது உள்குத்து வேலையைப் பார்த்துவிடுவார்கள் என்பதால், அக்கட்சிகள் செய்வதறியாமல் திகைக்கின்றன.

மக்கள் திமுகவை நம்ப மாட்டார்கள்

‘பாமகவுடன் கூட்டணி உறவு வைக்காமலேயே பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்களைக் திமுக கவர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே’ என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் கேட்டபோது, "பாமகவைப் பொறுத்தவரையில் எப்போதும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படுகிறது. ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக்காட்டுவதும், நல்ல திட்டங்களை நிறைவேற்றினால் மனம் திறந்து பாராட்டுவதும் பாமகவின் வழக்கம். பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த வேளாண்மைக்குத் தனி பட்ஜெட், நீர்வளத் துறைக்குத் தனி அமைச்சர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தல், துப்பாக்கிச் சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் போன்ற கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றியதால், பாராட்டினோம். மற்றபடி நாங்கள் அதிமுக அணியில்தான் தேர்தலைச் சந்திக்கிறோம். எங்கள் கட்சி வாக்குகளை திமுக கவர்ந்துவிட்டதாகச் சொல்வது அதீத கற்பனை. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுகவை நம்பி, மக்கள் எப்படி இன்னொரு முறை வாக்களிப்பார்கள்?" என்றார்.

மேலும், "திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறார். வரவேற்கிறோம். ஆனால், இதுவரையில் ஆளுங்கட்சி எதில் அதிக கெட்ட பெயர் வாங்கியிருக்கிறது என்றால், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்வது, வென்றவர்களைத் தோற்றதாக அறிவிப்பது, ஜெயித்தவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் தங்கள் கட்சியில் சேர்ப்பது போன்ற செயல்களால்தான். இந்த முறை அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டார் என்றால் ஸ்டாலினைப் பாராட்டலாம். அவர் எப்படியோ தெரியாது. ஆனால், கீழே இருக்கும் திமுக நிர்வாகிகள் அவ்வளவு நல்லவர்கள் அல்ல. எனவே, திமுகவால் நேர்மையாகத் தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" என்றார் பாலு.

மோகன்ராஜ்

பொறுத்திருந்து பாருங்கள்!

இதனிடையே தேமுதிகவும் கடந்த கால கசப்புகளை மறந்து திமுகவை நெருங்க ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து தேமுதிக கொள்ளை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜிடம் கேட்டபோது, "தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் சோர்விலிருந்து மீண்டும் வரும் தேமுதிக. அதற்கேற்ற நடவடிக்கைகளை கேப்டனும், அண்ணியாரும் எடுத்துவருகிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்" என்று முடித்துக்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டணிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்!

x