நாகர்கோவில் மாநகராட்சி, கன்னியாகுமரி நகராட்சிக்காக அருகில் உள்ள பேரூராட்சிகளை இணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. இதனால் குமரிமாவட்டம் தன்னகத்தே கொண்டிருந்த முக்கியமான ஒரு அடையாளத்தையும் இழக்க உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிக்காக 15 ஊராட்சிகளையும், 6 பேரூராட்சிகளையும் இணைக்கத் தொடர்ந்து கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடந்துவருகிறது. அதேபோல் இப்போது பேரூராட்சியாக இருக்கும் கன்னியாகுமரியை நகராட்சியாகத் தரம் உயர்த்தவும் கன்னியாகுமரி, அதன் அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியை இணைக்கும் திட்டமும் இருக்கிறது. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் பேரூராட்சிகளைக் கொண்டிருக்கும் மாவட்டம் கன்னியாகுமரிதான். இங்கு 55 பேரூராட்சிகள் உள்ளன. இதில் நாகர்கோவில் மாநகராட்சிக்காக தாழக்குடி உள்ளிட்ட 6 பேரூராட்சிகளும், கன்னியாகுமரி நகராட்சிக்காக கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் ஆகிய இருபேரூராட்சிகளும் இணைக்கப்படும் பட்சத்தில் 8 பேரூராட்சிகள் காலியாகும். இதனால் தமிழகத்திலேயே அதிக பேரூராட்சிகள் கொண்ட பட்டியலில் இருக்கும் குமரிமாவட்டம் அந்த அடையாளத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.