கொதிக்கும் பாலைத் தவறுதலாகத் தன் உடலில் ஊற்றிக்கொண்ட குழந்தையை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவிய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் அக்கறை, செந்துறை பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதயகுமார்-சுதா தம்பதி. அவர்களது ஒன்றரை வயது மகன் தனுஷ். இன்று காலை, காபி போடுவதற்காக அடுப்பில் பாலைக் கொதிக்கவைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் தாய் சுதா. குழந்தை தனுஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாலைத் தன் உடல் மீது ஊற்றிக்கொண்டுவிட்டான். இதனால் சூடும் எரிச்சலும் தாங்காத குழந்தை கதறி அழ, அதைக் கண்டு பெற்றோர் பதைபதைத்துப் போனார்கள்.
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். இணைப்பு சரியாகக் கிடைக்காததால், குறிச்சிகுளம் பகுதியில் எப்போதும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்சுக்கு, இருசக்கர வாகனத்தில் குழந்தையை வைத்து அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விவரம் சொல்லி, குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டினர்.
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ, “அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உத்தரவு வந்த பிறகுதான் நாங்கள் ஆம்புலன்ஸை இயக்க முடியும். நாங்களாக எடுக்க முடியாது” என அலட்சியமாகக் கூறியதுடன், ஆம்புலன்ஸை எடுக்க மறுத்துவிட்டாராம்.
ஒருபக்கம் குழந்தை கதறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஆம்புலன்ஸ் இருந்தும் வரமறுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாத்தூர் - பெண்ணாடம் பிரதானச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட நலத் துறை அமைச்சர் சிவசங்கர் அப்பகுதியில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவ்வழியாக வந்தார். அங்கு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததும், காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்து விவரம் கேட்டார். மக்கள் விவரத்தைச் சொன்னதும் உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அழைத்து எச்சரித்ததுடன், குழந்தையை ஏற்றிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டார்.
இதனால் குழந்தை உடனடியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது. தக்க சமயத்தில் அமைச்சர் செய்த இந்த உதவியால் நெகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவரை வெகுவாகப் பாராட்டினர்.