பாஜக கே.டி.ராகவன், மதன் மீது பியூஷ் மனுஷ் புகார்!


முன்னாள் பாஜக நிர்வாகி கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ தொடர்பாக, கே.டி. ராகவன் மற்றும் யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பியூஷ் மனுஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மனுஷ்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்பவர், தனது சேனலில் முன்னாள் பாஜக நிர்வாகியான கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதாகக் கூறினார்.

இந்த வீடியோ இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், மதன் ரவிச்சந்திரன், இதேபோல் 15 தலைவர்களின் 60-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்துக்களை புண்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாகக் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், கே.டி. ராகவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூபர் மதன் மற்றும் இந்துக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட கே.டி. ராகவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

காவல் துறை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

x