பாஜக மீனவரணி சார்பில், தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்திக்காக வாழ்த்து அட்டையுடன் சேர்த்து விநாயகர் படமும் அனுப்பி வைக்கப்பட்டது.
கரோனா கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு தமிழகத்தில் விநாயகர் ஊர்வலங்களுக்கும் பொது இடத்தில் விநாயகரை வைத்து வழிபாடு செய்வதற்கும் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை அனுப்பிவைக்கும்படி பாஜகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து பாஜகவினர் முதல்வருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக தமிழக பாஜகவின் மீனவரணி தலைவர் சதீஷ்குமாரும், அவர் சார்ந்த மீனவரணி நிர்வாகிகளும் வாழ்த்து அட்டையுடன் சேர்த்து விநாயகர் படம் ஒன்றையும் முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், பாஜக மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார், மீனவர் அணி மாநில நிர்வாகிகளான கொட்டிவாக்கம் மோகன், சண்முகமணி, சவுந்தர், பிரேம்குமார், கந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.