திருமண நிகழ்வுகளில் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டம்!


நாகர்கோவிலில் திருமண வீட்டில் அபராதம் விதிக்கும் அதிகாரி

கரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை, எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்னும் எச்சரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதேநேரம், ஆவணி மாதமான இப்போது முகூர்த்த நாட்கள் வரிசைகட்டுகின்றன. இதையொட்டி நடக்கும் விசேஷங்களில் கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது தமிழக அரசு. ஆனால், திருமண வீடுகளில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. முன்னதாக 2-ம் அலைக்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து 50 பேர் மட்டுமே பங்கேற்றுவந்த திருமண வீடுகள், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டன. ஆயிரக்கணக்கில் கல்யாணப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு தடபுடலாக திருமணங்கள் நடந்து வருகின்றன.

நீண்டகாலமாக குறுகிய வட்டத்துக்குள்ளும், நெருங்கிய உறவுகளையும் மட்டுமே அழைத்து திருமணங்கள் நடந்துவந்தது. இதனால், பெரிய அளவில் திருமணத்தை நடத்த காத்திருந்த பலரும் இந்த ஆவணி மாதத்தில் தடபுடலாக திருமணங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்போர், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது ஆகியவற்றை பின்பற்றுவதில்லை.

இந்நிலையில் இன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஸ்ரீமுத்துகுமார் திருமண மண்டபத்துக்குள், நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது அங்கு கரோனா தடுப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததை உறுதி செய்து, திருமண வீட்டாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்தத் தொகையை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சேர்ந்தே செலுத்தினர்.

x