லூர்தம்மாள் சைமனுக்கும் சிலை அமைக்க வேண்டும்


காமராஜர் அமைச்சரவையில் லூர்தம்மாள் சைமன்

காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மீனவப் பெண்மணி லூர்தம்மாள் சைமனுக்கு சிலை அமைக்க வேண்டும் எனவும், அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவேண்டும் எனவும் மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

காமராஜர் 2-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அவரோடு சேர்ந்து பதவியேற்றது ஏழே அமைச்சர்கள்தான். அதில் உள்ளாட்சி, மீன்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் லூர்தம்மாள் சைமன். குமரிமாவட்டம், மணக்குடி மீனவ கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். உள்ளாட்சியிலும், மீன்வளத் துறையிலும் அவரதுகாலத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்தார். உள்ளாட்சி நிர்வாகச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது, ஜிலேபி ரக மீன்களை இங்கே அறிமுகப்படுத்தியது, 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை உருவாக்கியது என இவரது சாதனைப்பட்டியல் அதிகம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லூர்தம்மாளை, அவரது மறைவுக்குப்பின் காங்கிரஸ் கட்சியே மறந்துவிட்டதாகவும் விமர்சனம் உண்டு.

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின், காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ‘நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், நாவலர் நெடுஞ்செழியன் உட்பட பல்வேறு தலைவர்களுக்கு சிலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்காக உழைத்த தலைவர்களைப் போற்றவும் சிறப்புச் செய்யவும், வரலாற்றுச் சுவடுகளை வருங்கால தலைமுறைகளுக்கு நினைவூட்டவும் தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மனம் திறந்த பாராட்டுகள்.

ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் முன்வைக்கப்படும் கோரிக்கையான முன்னாள் அமைச்சர், மீனவர்களின் மாசு மருவற்ற தலைமை லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கவேண்டுமென்று வைக்கப்படும் கோரிக்கை மட்டும் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை என்றே நினைக்கிறோம்.

இந்திரா காந்தி, காமராஜருடன் லூர்தம்மாள்

கடந்த 2011-ம் ஆண்டு லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டு விழா வந்ததை ஒட்டி, 2010-ம் ஆண்டே அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கவேண்டும், மணிமண்டபம் வைக்கவேண்டும் என்று அப்போதைய அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் சென்னைவரை சென்று சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், லூர்தம்மாள் சைமன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரானதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் சொல்லி சட்டசபையில் பேசச் சொல்லுங்கள் என்றார். நாவலர் நெடுஞ்செழியன் அதிமுக கட்சிக்காரராக இருந்தாலும் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைக்காமலேயே திமுக அரசு அவரை கெளரவப்படுத்தும் விதமாக சிலை அமைப்பது என்னே பெருந்தன்மை. அந்த பெருந்தன்மையை லூர்தம்மாள் விஷயத்திலும் காட்ட வேண்டும். லூர்தம்மாள் சைமனை முற்றிலும் மறந்துவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களைப்பற்றி எடுத்துக்கூறியபின், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் சட்டமன்றத்தில் ஒருமுறை பேசினார். அதன்பின் 3-வது முறையும் எம்எல்ஏவாக இருக்கும் அவர் தொடர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் மீனவ மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்.

குறும்பனை பெர்லின்

அதன்பின் வந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய அமைச்சர் பச்சைமாலை சென்னை சென்று சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியபோது, சிலைகள் வைப்பதால்தான் நாட்டில் பல பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்படுகிறது. சிலைகளை காப்பதிலேயே அரசு பெரும்பகுதி சக்தியை செலவழிக்கவேண்டியுள்ளது. தயவுசெய்து சிலை அரசியலைக் கைவிடுங்கள் என்று கூறி எங்களை திருப்பி அனுப்பினார். ஆனால் அதன்பின்பும் பல தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டது. லூர்தம்மாள் சைமன் மீனவர் தலைவரானதால் மீனவரல்லாத அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், மீனவர் நலன்சாராத அரசியல் கட்சிகளும் ஆட்சிகளும் திட்டமிட்டே மீனவர் தலைவர்களை அங்கீகரிக்க மறுக்கின்றனர்.

தற்போது அமைந்திருக்கும் அரசு மக்கள் அரசு. இது பாரபட்சம் பார்க்காத அரசு. சட்டமன்றத்தில் மீனவர் நலன் சார்ந்து கோரிக்கை வைக்க குரல் இல்லாத இந்நேரத்தில் மீனவ மக்களின் குரலாக மக்கள் கோரிக்கைகளை அரசே நிறைவேற்றும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சரியான நேரத்தில் எத்தனையோ தலைவர்களின் வரலாற்றைப் போற்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கும் இந்நேரத்தில், லூர்தம்மாள் சைமனுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடாதது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏதோ கவனக்குறைவாக விடுபட்டிருந்தாலும் இன்னும் வாய்ப்பிருக்கிறது. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே மீனவர்களின் ஒப்பற்ற தலைமை லூர்தம்மாள் சைமனுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வர் இதைச் செய்யவேண்டும்” என்றார்.

x