சேலம் - நாமக்கல் 4 வழிச் சாலையில் மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி இந்திய கம்யூ. தர்ணா


படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலத்தை அடுத்த நிலவாரப்பட்டியில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் நாமக்கல் இடையிலான 4 வழிச்சாலை, கன்னியாகுமரி - காசி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தச் சாலையில் சேலத்தை அடுத்த நிலவாரப்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிலவாரப்பட்டியில் உள்ள சர்வீஸ் சாலை வழியாகவே சென்று வருகின்றன.

வட மாநிலங்களில் இருந்து தினமும் நாமக்கல் வழியாக மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், நிலவாரப்பட்டி சர்வீஸ் சாலையிலேயே சென்று வருவதால் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் சேலத்தில் பெய்த கன மழையின் போது, நிலவாரப்பட்டி சர்வீஸ் சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் சேலம் - நாமக்கல் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பால பணி மந்தமாக நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலும், விபத்தில் சிக்கி மக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, நிலவாரப்பட்டி மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்காக மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் நிலவாரப்பட்டியில் திரண்டனர். போராட்டம் குறித்து அறிந்த பொதுப்பணி துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறியதை அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியினர், சர்வீஸ் சாலையின் ஓரத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், மந்தமாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவில் முடிக்காவிடில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். தர்ணா போராட்டம் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.