கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட காவல் ஆணையர் தீபக் எம். தாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம், மாவட்ட காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்திலரசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவை பின்வருமாறு:
தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின்போது கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி தற்போதுள்ள கரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதச்சார்பான ஊர்வலங்கள் திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.
தனிநபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் இதர கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு, அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும் போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.