மழைநீர் வரத்தால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு


திருவள்ளூர்: மழைநீர் வரத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் கடந்த 4-ம் தேதி முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மிதமான மழை, லேசான மழை என விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை திருவாலங்காட்டில் 10 செ.மீ., திருவள்ளூரில் 7.3 செ.மீ., தாமரைப்பாக்கத்தில் 6.3 செ.மீ., ஊத்துக்கோட்டை மற்றும் ஆர்.கே.பேட்டையில் தலா 5.5 செ.மீ., செங்குன்றத்தில் 4 செ.மீ., ஆவடியில் 3.1 செ.மீ., சோழவரத்தில் 2.6 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 1.8 செ.மீ., ஜமீன் கொரட்டூர் மற்றும் பூந்தமல்லியில் தலா 1.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சராசரி மழை அளவு 3.4 செ.மீ.,

இந்த மழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடியும், புழல் ஏரிக்கு விநாடிக்கு 251 கனஅடியும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு கடந்த 4-ம் தேதி காலை 1,731 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அது 1,769 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு கடந்த 4-ம் தேதி காலை 2,932 மில்லியன் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அது 2,978 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.