வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 20 புதிய அறிவிப்புகளை இன்று (06.09.2021) சட்டப்பேரவையில் அறிவித்தார் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி.
அவை வருமாறு:
1. வணிகவரித் துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. வணிகவரித் துறையில் கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் உள்பட 7 புதிய நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும்.
3. வணிகவரித் துறையில் செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 புதிய நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்படும்.
4. போலி பட்டியல் நபர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ‘தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களை பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகள் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1982’-ல் வரி ஏய்ப்பு செய்வோரையும் சேர்க்கும் வகையில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
5. வரி ஏய்ப்பு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
6. வணிகவரித் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை ரூ.3.86 கோடி செலவில் உருவாக்கப்படும்.
7. வேலூர், திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய வணிகவரி கோட்டங்களுக்கு உட்பட்ட போளூர், புதுக்கோட்டை, துறையூர், ஆத்தூர் (ஊரகம்), ஆத்தூர் (நகரம்), சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிப்பாளையம் ஆகிய வரிவிதிப்பு அலுவலகங்கள் தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இவ்வலுவலகங்களுக்கு மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
8. தமிழகத்தில் தற்போது 10 லட்சத்திற்கும் மேலான வரி செலுத்துவோர் உள்ளனர். இவர்கள் மாதாமாதம் அறிக்கை தாக்கல் செய்வதைக் கண்காணிக்கவும் தாமதமாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதைத் தவிர்க்கவும் ஏதுவாக, வரி செலுத்துவோரை தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, 40 பணியாளர்களைக் கொண்ட அழைப்பு மையம் ஒன்று ‘தமிழ்நாடு மின் ஆளுமை முகமை’ (எல்காட்) மூலமாக சென்னையில் நிறுவப்படும்.
9. வணிகர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக திருமண உதவித் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும். மேலும், விபத்தில் பாதிக்கப்படும் உறுப்பினர்களுக்கு நிரந்தர உடல் உறுப்பு இழப்பு ஏற்படும் நேர்வுகளில் விபத்துக் கால இழப்பீட்டுத் தொகையாக ரூ.25,000/- வழங்கப்படும்.
10. வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில், பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும்.
11. திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமையிடங்களில் 5 புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
12. பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.
13. இந்திய கிறித்தவ திருமண பதிவுச் சான்றின் உண்மை வடிப்புகளை துணை பதிவுத் துறை தலைவர்களே வழங்கும் வகையில், இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1872-ல் சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
14. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் திண்டிவனம் ஆகிய மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கும் 26 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பதிவுத் துறைக்கு சொந்தமாக உள்ள இடங்களில் ரூ.41.36 கோடி செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்படும்.
15. தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள், நிர்வாக மாவட்டப் பதிவாளர்கள், உதவி பதிவுத் துறை தலைவர்களுக்கு புதியதாக 50 வாகனங்கள் ரூ.4.10 கோடி செலவில் வாங்கப்படும்.
16. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக அவ்வலுவலகங்களில் அமைந்துள்ள பதிவறைகளில் இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் ரூ.5.98 கோடி செலவில் நிறுவப்படும்.
17. சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக்கருவியில் ஆவணதாரர் பெயரையும் காட்சிப்படுத்தப்படும் முறை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும்
18. சார்பதிவாளர் அலுவலகங்கள் கூர்நோக்கு அடிப்படையில் ‘அ’, ‘ஆ’ மற்றும் ‘இ’ வகை அலுவலகங்களாக வகைப்படுத்தப்படும்.
19. திங்கட்கிழமை தோறும் ‘பதிவு குறைதீர்க்கும் முகாம்’ நடத்தப்படும்.
20. ஆவண எழுத்தர் நல நிதியத்தை முழுமையாகச் செயல்படுத்தி அந்நிதியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.