சாலையில் கிடந்த வாக்கி டாக்கியை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநர்


ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சாலையில் கிடந்த வாக்கி டாக்கியை கண்டெடுத்த சரக்கு வாகன ஓட்டுநர் ஒருவர், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வழியாகச் சரக்கு வாகனத்தில் வந்த ஓட்டுநர் ஆகாஷ், அங்கு சாலையோரம் வாக்கி டாக்கி ஒன்றைக் கண்டார். ஆகாஷ் அந்த வாக்கி டாக்கியை எடுத்து, அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வாக்கி டாக்கியை ஆய்வுசெய்த போலீஸார் அதில் சிஎம்ஓ டாக்டர் ராஜ்குமார் என எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சாலையில் கிடந்த வாக்கி டாக்கி சென்னை வடக்கு மண்டலத்தில் பணியாற்றிய மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் ராஜ்குமாருடையது என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் டாக்டர் ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, தான் சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது பயன்படுத்திய வாக்கி டாக்கி என்றும் தற்பொழுது அதை வேறொருவர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், போலீஸார் அளித்த தகவலின் பேரில் ராயப்பேட்டை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராயலு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வாக்கி டாக்கியை வாங்கி மாநகராட்சி சுகாதார பிரிவில் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x