அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதா திமுக அரசு?


தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அதிகமாக வேலை வாங்கக்கூடிய, சவால்கள் நிறைந்த இந்தத் துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், திமுக அரசின் மீதான பாராட்டுகள், விமர்சனங்கள் குறித்தும் மனம்திறந்து நம்மிடம் பேசினார். அவரது பேட்டி:

10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததற்கும், இப்போது அவையில் இருப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

இன்றைய சட்டமன்றம்தான், இந்த அமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் சரியாக நிறைவேற்றுகிற சட்டமன்றமாக இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை… எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் உறுப்பினர்கள் சொல்கிறார்கள். அந்தளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேசவிட்டு, விளக்கமும் அளிக்கிறோம். முன்பெல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேசவே விடமாட்டார்கள். அப்படியே பேச அனுமதித்தாலும் அமைச்சர்களின் குறுக்கீடுகள் இருக்கும். ஆனால், இன்றைய முதல்வரோ, “உங்கள் துறை குறித்த குற்றச்சாட்டுக்கள் வந்தாலோ, உங்களிடம் நேரடியாக விளக்கம் கேட்டாலோ மட்டும் எழுந்து பதில் சொல்லுங்கள்” என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். “வீண் புகழுரைகளைத் தவிர்க்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்” என்றும் எச்சரித்திருக்கிறார். அதனால்தான் இன்றைய அவை, ஜனநாயக மாண்புடன், கண்ணியமாக, நாகரிகமாக நடக்கிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இந்த 4 மாதங்களில் நீங்கள் செய்த பணிகளில், உங்களுக்குத் திருப்தி தரக்கூடியது எது?

திருக்குறள் கருத்துகளைப் பரப்பும் வகையில் ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில், ஊடகங்கள் வாயிலாகத் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும், இந்தி பிரச்சார சபா போல உலகமெங்கும் வாழும் தமிழ் பிள்ளைகள் தமிழை முறையாகப் படிப்பதற்கென தனி அமைப்பு உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதன் மூலம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டகாலக் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறும்.

திமுக அரசு பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்கிறது என்று சீமான், பெ.மணியரசன் போன்றோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களே?

தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் நான் வெளியிட்ட இருவேறு அறிவிப்புகளை ஒன்றாகச் சேர்த்து சமூக வலைதளத்தில் யாரோ பரப்பிய அரைகுறைச் செய்தியைப் பார்த்துவிட்டு, கிளம்பிய சர்ச்சை இது. ஆக, அந்த அறிவிப்பை இவர்கள் யாரும் சரியாகப் படித்துப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும் வகையில், அவை சந்தி பிரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்பது ஒரு அறிவிப்பு. கால்டுவெல் தொடங்கி ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக நீதி, இடஒதுக்கீடு, இரு மொழிக்கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து வெளியான தலையங்கங்கள், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து ‘திராவிடக் களஞ்சியம்’ எனும் தனி நூலாக வெளியிடப்படும் என்பது இன்னொரு அறிவிப்பு. இந்த 2 வேலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனிப் பணிகள். சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலை அப்படியே எடுத்துக்கொண்டு, கண்டன அறிக்கை வெளியிட்டவர்கள் அதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பில் அப்படியிருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்திருக்கலாம்.

மைசூரில் மத்திய கல்வெட்டுத் துறைப் பராமரிப்பில் உள்ள தமிழ் கல்வெட்டுகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே... அரசு என்ன செய்யப்போகிறது?

நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே மிக அதிகமானவை தமிழ்க் கல்வெட்டுகள்தான். எனவே, கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளின் மைப்பிரதிகளை எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தால் கூடுதல் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. அந்த வேலையை எளிதாக்கும் வகையில் உயர் நீதிமன்ற உத்தரவு அமைந்திருக்கிறது. அவ்வாறு கொண்டுவருவதற்கு முன்பு சில வசதிகளைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவற்றை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்துதர நாங்கள் காத்திருக்கிறோம்.

இன்னொரு பக்கம், ஏற்கெனவே சுணக்கமாகி நின்ற தொல்லியல் ஆய்வுகளை எல்லாம் விரைவுபடுத்தியிருக்கிறோம். வேறு சில இடங்களிலும் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கப்போகிறோம். அவற்றை எல்லாம் அறிவியல்பூர்வமாகச் செய்து முடிப்பது என்பதிலும், அந்த ஆய்வறிக்கைகளை எல்லாம் உடனுக்குடன் வெளியிடுவது என்பதிலும் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தைப் பயனுள்ள வகையில் மாற்ற, ஏதாவது திட்டம் இருக்கிறதா?

ஒரு அமைப்பு எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்தப் பணிகளை அது முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. உலகத் தமிழ்ச் சங்கம் அவ்வாறு செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், எந்தவித பெரிய ஆராய்ச்சிகளும் நடக்கவில்லை என்பதை ஆய்வுக்கூட்டத்தில் கண்டறிந்த முதலமைச்சர், அது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

சென்னை, கோவையுடன் ஒப்பிடுகையில் தென்தமிழகம் தொழில் துறையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலைவாய்ப்புக்காக இங்குள்ள இளைஞர்கள் இடம்பெயர்வதும் தொடர்கிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் இந்தக் குறைகளைக் களைய என்ன செய்யப்போகிறீர்கள்?

தென்மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பூங்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்கப் போகிறோம். இது 20 ஆயிரம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளைத் தரும். அதேபோல தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கவுள்ளோம். அதேபோல அங்கு ஃபர்னிச்சர் பார்க், ஃபுட் பார்க் போன்றவையும் பரிசீலனையில் இருக்கின்றன. அடுத்த கட்டமாக நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறோம். நாங்குநேரி விரைவில் தென்தமிழகத்தின் தொழில் கேந்திரமாக மாறும். சிவகங்கையில், ஏற்கெனவே இருப்பதுடன் கூடுதலாக ஒரு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. மின்வாகன யுகத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், தமிழக அரசின் மின்வாகனக் கொள்கையில் சில திருத்தங்களையும் கொண்டுவர இருக்கிறோம். எப்படி மோட்டார் வாகன துறையில் உலக வரைபடத்தில் சென்னை முக்கியமான ஊராகத் திகழ்கிறதோ, அதேபோல மின்வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கியமான இடமாகத் திகழும்.

‘ஆட்சி மாற்றத்துக்காக உழைத்த எங்களை திமுக ஏமாற்றிவிட்டது’ என்ற அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

திமுகவைப் பொறுத்தவரையில் ஒருபோதும் யாரையும் ஏமாற்றாது என்று உறுதியளிக்கிறேன். தற்போதுள்ள நிதிச்சுமை காரணமாக அகவிலைப்படி உயர்வை ஒத்திவைத்திருப்பதாகத்தான் நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். அடுத்த ஆண்டு அது சேர்த்து வழங்கப்படும் என்றுதான் கூறியிருக்கிறோம். அரசு ஊழியர்கள், தமிழக அரசின் நிதிச்சுமையைக் கருத்தில்கொண்டு, இன்றைய சூழலைப் புரிந்துகொண்டு தங்களுடைய ஆதரவினை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

x