மதுரவாயலில் அறுந்து சென்ற காற்றாடியைப் பிடிக்க முயன்ற போது, மின்சாரக் கம்பியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தார்.
சென்னை, மதுரவாயல் கோவில்பட்டி பாலகிருஷ்ணன் தெருவில் முதல் மாடியில் வசித்து வருபவர் நடராஜ். கூலித் தொழிலாளி நடராஜுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இவரது 11 வயது மகன் கிஷோர், நெற்குன்றத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை கிஷோரின் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டில் தனியாக இருந்த கிஷோர், மதியம் மாடியில் நின்று காற்றாடி விட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாகக் காற்றாடி கையிலிருந்து நழுவிச் சென்றது. உடனே கிஷோர், காற்றாடியைப் பிடிக்க முயன்றபோது அருகிலிருந்த உயர் மின்அழுத்த கம்பி மீது தவறி விழுந்ததில், மின்சாரம் தாக்கி காலில் தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பார்த்த மெக்கானிக் ரவீந்தரன் என்பவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த மதுரவாயல் போலீஸார் மின்சார இணைப்பைத் துண்டித்து, சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, மதுரவாயல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்றாடியைப் பிடிக்க முயன்ற சிறுவன், மின்சாரக் கம்பி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.