கழிவுநீர் ஓடை வராவிட்டால் காத்திருப்புப் போராட்டம்!


வை.தினகரன்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜஸ்டஸ் தெருவில், கழிவு நீரோடை கேட்டு கடந்த 2 வருடங்களாகவே காத்திருந்த மக்கள், அதற்குரிய பலன் கிடைக்காததால் போராட ஆயத்தமாகி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வை.தினகரன் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட வாத்தியார் விளை, ஜஸ்டஸ் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஜஸ்டஸ் தெருவில், கடந்த 2 வருடங்களாக கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோல் நோய், காய்ச்சல் உட்பட பலவிதமான நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேற்படி பகுதியில், சுமார் 2 வருடமாக கழிவுநீர் ஓடையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து தனது சொந்த நிலத்தில் கழிவுநீர் ஓடை செல்லக் கூடாது என தடுத்து வைத்துள்ளனர். இதனால், மேற்படி சுற்று வட்டாரத்தில் உள்ள கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல், தெரு முழுவதும் தேங்கி நின்று புழு உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்திடம் நேரடியாக புகார் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஆஷா அஜித், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றனர். அப்படிச் சொல்லி ஒரு வருடம் கடந்த பின்பும், இதுவரையில் மேற்படி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை, கழிவுநீர் ஓடை மாற்றி அமைக்கப்படவுமில்லை.


இந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், புதிதாக கழிவு நீர் ஓடை அமைத்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம். உடனே இதைச் செய்யாவிட்டால் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, செப்டம்பர் 20-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தினமும் ஒரு மணி நேரம் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.

x