சுங்கத் துறை பெண் துணை ஆணையருக்கு கத்திக் குத்து!


சென்னை, கோயம்பேடு கேமஸ் வில்லேஜ் குடியிருப்பில் வசித்து வருபவர் சர்மிளா (32). இவரது தந்தை கிருஷ்ணன், சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சர்மிளா சென்னை விமான நிலையத்தில் சரக்கு பிரிவில் (cargo) சுங்கத் துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி செல்வமுத்துக்குமரன் என்ற கணவரும், 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சர்மிளா, மதுரையில் நடைபெற உள்ள தனது உறவினர் திருமணத்துக்கு செல்ல வேண்டும் என தனது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு கணவர் செல்வமுத்து உறவினர் திருமணத்துக்கு செல்லக் கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. அப்போது, மதுபோதையில் இருந்த சர்மிளா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னை தானே குத்திக் கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மதுபோதையில் இருந்த கணவர் செல்வமுத்து, ஆத்திரத்தில் சர்மிளா கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரது மார்பு, கை பகுதியில் சரமாரி குத்தினார். இதில் படுகாயமடைந்த சர்மிளா, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சர்மிளாவை கத்தியால் குத்திய அவரது கணவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x