இதெல்லாம் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்!


திருச்சி வேலுசாமி

தமிழகத்தில் பாஜக ஆதரவு, எதிர்ப்பு என்ற இரண்டுமே வெகு தீவிரமாக இருக்கின்றன. மோடி குறித்த எதாவது ஒரு எதிர்மறை செய்தி கிடைத்தால், அதை அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரோ பகிர் என்று பகிர்ந்து தள்ளுகிறார்கள் பாஜக எதிர்ப்பாளர்கள். அதேபோல, பாஜக ஆதரவாளர்களோ தமிழக முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் தான் முக்கியமாக குறிவைக்கிறார்கள். இவர்களைப் பற்றி கிடைக்கும் சிறுதகவலையும் ஊதிப்பெரிதாக்கி, அடுத்த நிமிடமே வலைதளங்களில் பரப்புகிறார்கள்.

திமுக அளித்த வாக்குறுதிகளில் பலதும் இன்னும் நிறைவேற்றப் படாதது குறித்தும், அன்றாடச் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை பாஜக ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். திமுக ஆதரவாளர்களோ மோடியின் நிர்வாகத்திறமையால் பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவது போன்றவற்றை சுட்டிக்காட்டிச் சாடுகிறார்கள்.

இப்படி இவர்களுக்குள் போட்டி கடுமையாகப் போய்கொண்டிருக்க, காங்கிரஸும் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறது. ஒன்றிய அரசின் நடவடிகைகளை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துவருகிறார். அது வலைதளங்களிலும் உடனுக்குடன் பகிரப்படுகிறது. அதைப் பார்த்த பாஜகவினர், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள். இக்கேள்வியை பிரதமர் மோடியும் பலமுறை கேட்டுள்ளார். தற்போது அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் சூடுபறக்கின்றன.

காங்கிரஸ் காலத்தில் இந்தியா என்ன செய்தது என்று கேட்டு வரும் பதிவுகளுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி ஒரு வருடத்துக்கு முன் தனது முகநூலில் எழுதியிருந்ததை எடுத்து பதிலாகக் கொடுக்கிறார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். ஒரு வருடம் ஆனாலும் அவரது அந்தப் பட்டியல் திரும்பத்திரும்ப பகிரப்பட்டு பாஜகவினருக்கு பதிலாக சொல்லப்படுகிறது. அவரின் அந்த பதில்..,

’மோடியின் வெற்றுக் கூச்சல் இனிமேல் எடுபடாது. இனி மக்கள் நம்பத் தயாராக இல்லை. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா என்ன செய்தது என்ற கேள்விக்கு பதிலை நான் தருகிறேன்.

நம்ம நரேந்திர மோடி பிறக்கும் முன்னமே பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா, நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த சமயத்திலேயே உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா.

நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா. நரேந்திர மோடி கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே மாபெரும் அணைகளான பக்ரா நங்கல் மற்றும் ரிஹான்ட் அணைகளை கட்டியிருந்தது இந்தியா. உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

நரேந்திர மோடி அவரது மொழியில் அ, ஆ எழுத பழகிக் கொண்டிருந்த காலத்திலேயே, பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை திறந்திருந்தது இந்தியா.

நரேந்திர மோடி, ஒழுகும் தனது மூக்கை சரியாகத் துடைக்கக் கூட பழகாத காலத்திலேயே, எண்ணற்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தியை துவக்கியிருந்தது இந்தியா.

நரேந்திர மோடி, அவரது வீட்டில் சிம்னி விளக்கு ஏற்றப் பழகிக் கொண்டிருந்த காலத்திலேயே தாராபூர் அணு உலையிலிருந்து மின் உற்பத்தியை துவக்கியது இந்தியா. இந்திரா காலத்திலேயே பொக்ரானில் முதல் அணு வெடிப்பு சோதனையை இந்தியா செய்தது.

நரேந்திர மோடி தனது சட்டைப் பொத்தான்களை சரிவர மாட்டத் தெரியாத காலத்திலேயே, டஜன் கணக்கிலான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களில் இருந்து, படித்து முடித்த ஆயிரக்கணக்கான பட்டதாரி வல்லுநர்கள் , வெளிவரத் துவங்கி விட்டனர் இந்தியாவில்.

நரேந்திர மோடி, பள்ளியில் அமர்ந்து பலகையைப் பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே வல்லபாய் படேலால் முடியாத போர்ச்சுக்கீசியரிடம் இருந்து கோவாவை பெற்றது இந்தியா. நரேந்திர மோடி, முளைத்த பற்களை தொட்டுத்தடவி எண்ணிக்கொண்டிருந்த வேளையிலேயே ஆர்யபட்டா, பாஸ்கரா, ரோகிணி, ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி என விண்வெளி முஸ்தீபுகளை, இஸ்ரோ துவக்கியிருந்தது. அக்கினி என்ற ஏவுகணையும் தயாரித்திருந்தது.

நரேந்திர மோடி, இமயமலைக்கு ஓடிப்போனதாக (??) சொல்லித் திரியும் காலத்திலேயே லாகூர் வரை ஊடுருவி, எதிரிகளை துவம்சம் செய்தது இந்தியா. பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கி காட்டியது இந்தியா.

மேலும், 1947-ல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியர்களின் சராசரி வயது 32, மோடி ஆட்சிக்கு வரும்போது அது 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1947-ல் சுதந்திரம் வாங்கி இந்தியா என்ற நாடு உருவாகியபோது, இந்தியாவில் படிப்பறிவு உடையவர்கள் 16%, 2014-ல் மோடி ஆட்சிக்கு வரும்முன் அது 74% சதவீதமாக உயர்ந்துள்ளது.

1947-ல் சுதந்திரம் வாங்கும் போது, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழிருந்தவர்கள் 70%, மோடி ஆட்சிக்கு வரும்முன் அது 21 சதவீதமாக குறைந்திருக்கிறது. 1947-ல் சுதந்திரம் வாங்கும் போது 2.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ஜிடிபி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 57 லட்சம் கோடி ரூபாயாக பெருகியிருந்தது. சுதந்திரம் வாங்கும் போது 250 ரூபாயாக இருந்த சராசரி ஆண்டு தனி நபர் வருமானம், மோடி ஆட்சிக்கு வரும்முன் 88,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுதந்திரமடைந்தபோது 1362 மெகாவாட் என்ற அளவில் இருந்த மின் உற்பத்தி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 267 ஜிகா வாட் என்று பல மடங்கு உயர்ந்திருந்தது. சுதந்திரமடைந்தபோது இந்தியாவில் வேறும் 1500 கிராமங்களில் தான் மின்சார வசதி இருந்தது, மோடி ஆட்சிக்கு வரும்முன் 6,22,867 கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டுவிட்டது. 1947-ல் ஒற்றை இலக்க சதவீத மக்களுக்கு மட்டும் கிடைத்த மின் வசதி, மோடி ஆட்சிக்கு வரும்முன் 80% மக்களுக்கு கிடைத்துள்ளது.

அப்போது 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இருந்தன, மோடி ஆட்சிக்கு வரும்முன் 56 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கபட்டுவிட்டன. இதெல்லாம் வளர்ச்சி இல்லையா? முன்னேற்றம் கிடையாதா? ஒருவேளை, அம்பானி, அதானியின் சொத்து மதிப்பு பூதாகரமாக உயர்வது மட்டும்தான் வளர்ச்சி என்று மோடி ஆதரவு பிஜேபி ஆட்கள் நம்புகிறார்களோ?

என்னமோ, நரேந்திர மோடி வந்துதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போவதாக, கனவு கண்டுகொண்டு, வாயாலேயே வடை சுட்டுக் கொண்டுத் திரிகிறது ஒரு கூட்டம்’

- இப்படி நீளும் அந்தப் பதிவு இப்போதும் சமூக வலைதளங்களைச் சுற்றிவருகிறது.

x